RSS

Thursday, July 31, 2008

சிட்டுக் குருவி...!

சிட்டுக் குருவி


பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் சாய்வு நாற்காலியை எப்படி இயக்குவதென்றே தெரியாமல் அப்படியே வெகு நேரம் காத்திருந்து.. அருகில் அமர்ந்தவர்.. செய்வதைப் பார்த்து.. வெகு இயல்பாக நானும் அந்த கருவியை கூடும் மட்டும் அழுத்திப் பிடித்து பின் சாய்த்துக் கொண்டேன்..

மாலையானதால் ஆங்காங்கே போடப்பட்ட வெளிச்சக் கீற்றுகளோடு.. சன்னலோரக் காற்று.. மென் புயலாக முகத்தில் அடித்தது..

சன்னலின் விளிம்பில் தலை சாய்த்து மனம்… பின்னோக்கி ஓட.. பேருந்து முன்னோக்கி… மெல்ல நகரத் துவங்கியது..

நகரத்தில் நடப்பட்ட நாற்றாயிருந்தாலும்… ஆணி வேர் கிராமத்தின் வயல்களில் இழையோடி இருப்பதை மறுக்க முடியாது..

நடுநிலைப் பள்ளி வயதில் ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற போது..

பாட்டி தந்த அச்சு கருப்பட்டியின் இனிப்பும்.. ஆப்பிள் பழத்தின் வடிவில் வாங்கிக் கொடுத்த பண்டமும் இன்னும் நாவில் தித்திக்கிறது… அந்த இனிப்புச் சுவைக்காக மட்டுமல்ல… மணக்க மணக்க பச்சை வெங்காயம்.. கருவேப்பிலை.. கொத்தமல்லி நறுக்கி… நிலக்கடலையோடு பொரியில் இட்டுக் கை மணம் சேர்த்து கலக்கி பாசத்தோடு பரிமாறும் பாட்டியினை நோக்கி ஓடும் மழலை மனம்…

இன்று வரை பாட்டியின் கை மணத்தில் ஒருவரும் பொரி கலக்க வரவில்லை.. ஒவ்வொருமுறை பொரி சாப்பிடுகையிலும் பாட்டி நினைவு கண்ணில் நிழலாட.. அம்மா சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பதுண்டு..

கிராமிய மணம் நாசியில் இறங்க என் ஒவ்வொரு கோடை விடுமுறையும் குதூகலத்தோடு ஆரம்பமாகும்..

பாட்டி வீட்டில் பெரிய ஆசாரத்தில் நெடுந்தூண்கள் நிற்க… மேலே வேயப்பட்ட பெரிய ஓட்டு அடுக்குகள்..

அதற்கு எதிர்புறம் வலது ஓரத்தில்.. சின்ன குடில் போன்ற தென்னங்கீற்றினால் வேயப்பட்ட சிறிய சுண்ணாம்புக் கல் மண் சுவர் கொண்ட அந்த சமையலறை…

என் இப்போதைய தாவர தவிப்புக்கு வித்திட்டவர் பாட்டி தான்.. வீட்டின் முற்றம் தொடங்கி.. எங்கு நோக்கினும் பச்சை பட்டாடை அணிந்து.. தாவர இளந்தளிர்கள் என் பாட்டி நோக்கி சிரிப்பதாய் உணர்வேன்..

பாட்டியின் கையில் தொட்டு நட்டால் போதும்.. பெரியவர் கை பிடித்து நடை பழகும் குழந்தை போல.. பாட்டியின் விரல் தடவுதலில் சிலிர்த்து தளிர்விடும்..

கேழ்வரகு அரைகல்லில் வைத்து அரைத்த வண்ணமே.. பாட்டி சொல்லும் கதையில்.. பெரும் பகுதி இன்று மறந்தே விட்டிருந்தேன்..

அங்கு சிதறும் தானியத்தைப் பொறுக்கி உண்ணவே.. நிறைய குருவிகள் சிமெண்ட் முற்றத்தில் வந்து அமர்ந்து கொள்ளும்..

கண்டும் காணாதது போல் நான் அந்த சிட்டுக் குருவிகளையே பார்த்திருப்பேன்.. இதற்காகவே… ஒரு நாள் முழுக்க அந்த குருவிக்கு அரிசி வைத்து அரிசி வைத்து.. அரைப்படி அரிசி காலியாக்கி.. திட்டு வாங்கிய அனுபவம் நிறைய..

அழகிய சிறகுகள் சட சடக்க.. அது கொத்தித் தின்னும் அழகு பார்க்கவே காத்திட்டு இருந்த நாட்கள் அதிகம்..

குருவி எங்கு தூங்கும்?? மழை வந்தா எப்படி நனையாம இருக்கும்..?? குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு…? இப்படி பலவாறு எண்ணி எண்ணி தூங்காமல் தவித்த என் மனத்தோடு மழையில் நடுங்கும் இரவும் சேர்த்துத் தவித்தது அதிகம்…

குருவி எப்போதும் என்னோடே வைத்துக் கொள்ள ஒரு ஆலோசனை.. பாட்டி முந்தானை பிடித்து அழுது அடம்பிடித்து வெற்றி கரமாக ஒரு குட்டி மாஸ்டர் ப்ளேன் அரங்கேறத் தயாரானது.

கோதுமை புடைக்கும் முறத்தை.. ஒரு தட்டுக் குச்சி வைத்து நிற்க வைத்து.. அந்த குச்சியில் நீண்ட மெல்லிய சணல் கயிறு கட்டி.. தூரத்தில் நான் பிடித்த படி இருக்க…

அந்த முறத்தின் அடியில் நிறைய அரிசி பறப்பியிருக்க… குருவி வரும் வரை கயிறு பிடித்த கையோடு அசையாமல் சிலையாகியிருந்தேன்..

குருவி அரிசி கொத்துகையில்.. முறம் கொண்டு உடன் கதவடைத்து அதனை நான் பிடித்து செல்லமாய் வளர்க்க ஒரு பெரிய திட்டம்.. கண்ணில் சிறகடித்தது..

இப்படி செய்து முன்பு ஊரில் சிலர்.. குருவியைச் சுட்டு சாப்பிட்டிருக்கிறார்களாம்.. கேட்கையிலேயே அவர்கள் மேல் கடும் கோபம் மூண்டது.. சின்ன குருவி சாப்பிட்டு தான் இவர்கள் பசி ஆறுமா??!! ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள்?? என்று ஆதங்கம் மேலெழ மனதைத் தேற்றி.. குருவிக்காக காத்திருந்தேன்..

நல்லவேளை எங்கள் பாட்டி வீட்டில் சுத்த சைவம்.. மேற்கண்ட எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று மனம் நிம்மதியடைந்தது..

குருவி மெல்ல ஒன்று ஒன்றாக வந்தமர்ந்தது.. என்றைக்கும் இல்லாமல்.. முறத்தினுள் அரிசி இருக்கவே கொஞ்சம் தயங்கியது..

இப்படியே தினமும் வைத்தால் குருவி வந்து கொத்தும்.. பின்பு நீ பிடித்து வளர்க்கலாம் என்று.. பாட்டி அனுபவ மொழி உதிர்த்தார்..

நாட்கள் ஓடினவே தவிர.. என் கைக்கு சிட்டுக் குருவி எட்டவே இல்லை..
விடுமுறை முடிந்து.. வீடு திரும்பியதும்.. முதல் வேலையாக அரிசி தேடி எங்கள் வீட்டின் முன்பிருக்கும் மதில் சுவர் துவக்கத்தின் மேல் அரிசி வைத்தேன்.. குருவிக்கு தண்ணீர் தாகமெடுக்குமே… உண்கையில் விக்கினால்.. அதனால்.. கொஞ்சூண்டு தண்ணீரில் நனைத்து நனைந்த அரிசியைப் பறிமாறினேன்..

திண்ணையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருக்க.. ஒரு குருவி வந்து அழகாய் கொத்தியது.. வில்லன் காக்கா வந்து… குருவியை விரட்டி அடித்து.. தான் கொத்திக் கொண்டு போனது கண்டு.. காக்காவை நான் விரட்ட… கூடவே குருவியும் ஓடியது..

சில நாட்கள் இப்படியே செய்து வர…

அரிசி வைக்க மறந்த நாட்கள்.. வீட்டின் வெகு அருகில் இருக்கும் மாதுளை மரத்தின் கொம்பில் வந்தமர்ந்து என்னை தனது குரலால் அழைக்கும்..

எத்தனை குருவிகள் தன் மதுர மொழியால் காற்றை மயக்கினாலும்.. ஏனோ என் அன்பு தோழியாகிப் போன இந்த குருவியின் குரல் மட்டும்.. எப்போதும் தனியாக எனக்கு கேட்கும்..

கேட்ட மாத்திரத்தில்.. ஓடிச் சென்று அரிசி எடுத்து வந்து மதில் சுவற்றின் மேல் வைக்க.. காத்திருந்து.. மாதுளை கிளை தாண்டி.. முல்லை கொடி அமர்ந்து.. மெல்ல மெல்ல தாவி வந்து கொத்தும் அழகே அழகு தான்..

எனக்கும் என் குருவிக்குமான பிணைப்பு இப்படியாக இறுகத் துவங்கியது.. இடைவெளிகள் குறையத் துவங்கின.. எனைக் கண்டு ஒரு பாசப் பார்வையை.. நேச கலவையை.. தன் குரலால்.. விழியால் அலகால் தூவி விட்டுப் போகும்..

குருவியை எப்படி நான் தோழியெனக் கண்டு கொண்டேன்… காரணம் இருக்கிறது.. அது எதிரிலிருக்கும் இருபதாண்டு கால வேப்பமரத்தில் தங்கி முட்டையிட்டு.. தனது குஞ்சுகளோடு என்னை பார்க்க வந்தது..
நான்கு குருவி குஞ்சுகளோடு அது வந்து அமர்ந்த போது… எனக்குள் ஏற்பட்ட உணர்வு.. தாய்மையை விஞ்சி நின்றது..

சிவந்த வாய் பிளந்து கொத்த தெரியாமல் ஆ… ஆ என்று அம்மாவிடம் காட்ட… அம்மா கொத்தி அதன் அலகால் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் அழகு.. காண கண் கோடி வேண்டும்..

இந்த அழகு காணவே வீட்டில் அரிசி இல்லாத கடினமான காலத்திலும்.. அம்மாவுக்குத் தெரியாமல்.. அரிசி மூட்டையின் சணல் பை துளாவி.. ஒட்டியிருக்கும் அரிசித் துணுக்குகளை எடுத்து வந்து போடுவேன்.. ரேசன் அரிசி.. நாம் சாப்பிட முடியும்.. ஆனால்.. அப்போது பிறந்த குஞ்சுகள் எப்படி விழுங்கும்.. என்ற பதைப்பு மனசில் வரும்.. ஆகவே.. நல்ல அரிசி.. எல்லாம் படையலுக்கு போகும்..

அம்மாவைக் கூப்பிட்டு அவர்களையும் ரசிக்க வைத்திருந்தேன்.. நான் வைக்காட்டியும் அம்மா கொண்டு வந்து வைக்கத் துவங்கினார்கள்..

கொஞ்ச காலத்தில் குஞ்சு குருவிகள் பெரிதாகின.. தனது குடும்பத்தோடு வந்து என்னை நலம் விசாரித்துப் போகும் ஒரு நேசமான குருவி குடும்பத்தோடு நான் பிணைந்திருந்தேன்.

ஒரு நாள்.. வெடிச் சத்தம் கேட்கவே.. பதறி அடித்து வெளிப்பட்டேன்.. அடுத்தடுத்து வந்த வெடிச் சத்தத்தில்.. தீபாவளி பண்டிகை இல்லை.. கிரிக்கெட் வெற்றி இல்லை.. அரசியல் தலைவர் விடுதலை இல்லை.. கோவில் திருவிழா இல்லை.. வீதியில் யாரும் இறைபதவி அடையவும் இல்லை.. என்ன விசேசமாக இருக்குமென குழம்ப…

குழப்ப ரேகைகள் முகத்தில் படரும் முன்… திபு திபுவென ஆட்கள் ஓடி வந்தனர்.. எங்கள் பெரிய கதவு தாண்டி.. உள்ளே வந்து.. இந்தப் பக்கமா தான் இருக்கும்.. வா என்று சத்தம் போட்டபடி வீட்டின் சுற்றுப் புறச் சந்தின் வழியே ஓடினர்..

கொஞ்ச நேரத்தில்.. இங்க இல்லை.. வா அங்கெங்காவது இருக்குமென ஒருவருக்கொருவர் சொல்லி திரும்ப வந்த வழியே ஓடினர்..

நிலைமை எனக்கு விளங்காமலிருக்க.. அம்மா உடனே பதறிச் சொன்னார்.. துப்பாக்கி வைத்து குருவி வேட்டை செய்திருக்கிறார்கள் என்று..

படபடக்கும் நெஞ்சோடு சுற்றும் முற்றும் பார்க்க… என் வீட்டு சுவரை ஒட்டி போடப்பட்ட கற்களின் இடுக்கில்.. ரத்தம் வழிந்த படி… என் பாசமிகு சிட்டுக் குருவி சுருண்டுகிடந்தது..

கண்கள் பனிக்க.. அதனை எடுத்து..
மெல்லிய விரல்களால்.. இறகுகளைத் தடவிக் கொடுத்தேன்..
ரத்தம் வழிந்த பிசுபிசுப்பு கைகளில் ஒட்டிக் கொண்டது..

இதயத்தில் யாரோ வேல் பாய்ச்சி துலாவிய வலி படர்ந்தது..

அழுதழுது.. இறுதியாக இறுதி ஊர்வலம் செய்ய… அதற்கு மிகப் பிடித்த மாதுளை மரத்தின் அடியில் நன்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது..

சாலையின் மின் கம்பங்களில் எங்கேனும் அங்கொன்று இங்கொன்றாக காணக் கிடைக்கும் குருவிகளின் சிறகடிப்பைக் காணுகையில்..

அந்த பாசமிகு குருவியின் ஸ்நேக மொழியையும் அதன் பாசமான இறகுகள் தொட்ட அந்த பிசுபிசுக்கும் என்னை விட்டு அகலாமல் இன்னும் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..!!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பின் குறிப்பு:

சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையில்.. எங்கள் ஊரில் உள்ள மொத்தம் 72 வார்டு இடங்களில் 52 வார்டு இடங்களில் குருவி இனமே அழிந்துவிட்டதாம்..

அடுக்குமாடி குடியிருப்புகள்.. விவசாய நிலங்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள்.. விவசாய பூமிகள் வீடுகளாதல்.. ஓட்டு வீடுகள் எல்லாம் ஆர்.சி கட்டிடங்களாதல்.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவும் பழக்கம் போய்… நேரே பாதாழ சாக்கடைக்கு சமையல் அறையிலிருந்தே அனுப்பப்படும் கழிவு நீர்.. இதனால் வாசலில் கழுவையில் எறியப்படும் சில சோற்று பருக்கைகள் கூட குருவிக்கு கிடைக்காமல் போகும் நிலை.. இப்படியான மாற்றங்கள் மூலம்.. குருவி இனம்.. தங்க வசதியின்றி.. உண்ண உணவின்றி.. அந்த இனமே அழிந்துவிட்டதாம்..

படித்ததும் மனம் கனத்துப் போனது.. என்னுள் இருக்கும் குருவி மீதான அதீத பாசம்.. என்னை இப்படைப்பை எழுத வைத்தது..

எத்தனை ஆர்.சி வீடுகள் கட்டினாலும்.. குருவிகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏற்ற வகையில்.. சின்ன சின்ன பொந்துகள்.. அமையும் படி வடிவமைத்தால் மிஞ்சியிருக்கும் குருவி இனமேனும் பெருகும்..

கதை என்ற தகுதி இதற்கு உண்டா இல்லையா.. நான் தேறினேனா இல்லையா என்பதை தெரியாவிடினும் உலகில் உணவின்றி இடமின்றி இறந்து போன அத்தனை குருவிகளுக்கும் என் இப்படைப்பு சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.

எழுத்தாக்கம் - பூமகள்.

1 comments:

butterfly Surya said...

Xlent post and infor. Very nice. Keep writing.

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


http://butterflysurya.blogspot.com


தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

நன்றி