RSS

Monday, July 14, 2008

அச்(சு)சகப் பிழை..!

அச்(சு)சகப் பிழை..!

நான் இப்போ ஆஸ்பத்திரி அறையில சன்னல் கம்பில முகத்துல வைச்சி வானத்தைப் பார்த்துட்டு நின்னுட்டு இருக்கேன்… நெஞ்சு கடந்து துடிச்சிட்டு இருக்கு… ஆறுதலா பேச சொந்த பந்தம் யாருமில்ல… உங்க கூட சித்த நேரம் பேசிட்டு இருக்கறேனே… இருப்பீங்களா?

நான் ஒரு கிறுக்கி… என்னைப் பத்தி ஒன்னுமே சொல்லாம இருந்தா எப்படி உங்களுக்கு என்னை தெரியும்…


நான் அஞ்சக்கா... எனக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒரே நம்பிக்கையா இருந்த எம் புருசன் ஐயாசாமியும் கட்டட வேலையில மாடியிலிருந்து கீழே விழுந்து இடுப்பெலும்பு முறிஞ்சி படுத்த படுக்கையாயிட்டாரு… வீட்டுல இருந்த பணமெல்லாம் புரட்டி.. கந்து வட்டிக்கு கடன் வாங்கி டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாத்தப் பார்த்தேன்.. அவரு.. எனக்கு தொல்லை தரக் கூடாதுன்னே மனசொடஞ்சி.. கவலையிலேயே போயி சேர்ந்துட்டாரு… அவரு போயி சேர்ந்தப்ப என் கையில ரெண்டு வயசு குழந்தையா இருந்தா குயிலரசி..


கந்து வட்டிக்காரங்க என்ர குடிசை முன்னாடி வந்து என்னோட தினக்கூலி முழுக்க புடுங்கிட்டு.. கெடு கொடுத்துட்டு போயிட்டாங்க..

ஆங்.. .சொல்ல மறந்துட்டேனே…

எனக்கு ஆத்தா வைச்ச பேரு… அஞ்சுகம்.. ஆனா இன்னிக்கி வரைக்கும் என்னை எல்லாரும் ‘அஞ்சக்கா’ன்னு தான் கூப்பிடுறாங்க.. ஐஞ்சாப்பு வரை படிச்சிருக்கேன்.. அதுக்கு மேல என்னோட ஆத்தாவுக்கு உதவியா இருக்க வேண்டியதா போச்சு…

என்னோட விசனத்தை ஆரு கிட்ட சொல்லி அழறதுன்னு தெரியல சாமி.. அதான் உங்க கிட்ட புலம்புறேன்… நாக்கு வறண்டுடிச்சி.. இருங்க.. தண்ணி குடிச்சிக்கிறேன்…

மடக்… மடக்…..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……. என்ன தா சொல்லுங்க.. இந்த பானையில வைச்சி குடிச்ச தண்ணிக்கு ஈடா ஒரு தண்ணியும் சொல்ல முடியாது சாமி..

“அஞ்சக்கா..!!”

யாரோ கூப்பிடறாங்க.. இருங்க சாமி பார்த்துட்டு வர்றேன்..

அஞ்சக்கா… உன் உடம்பு இப்போ எப்படி இருக்கு?? உன்னை நிக்க வேணாம்னு சொல்லியிருக்காங்கல்ல… ஏன் இப்படி நின்னுட்டு எங்க உயிர வாங்கற… பெரிய டாக்டரம்மா பார்த்தா எங்கள தான் திட்டுவாங்க.. வா.. உனக்கு ஒரு ஊசி போடனும்.. உட்காரு..

நிசமான தடுப்பூசியை விட நர்சம்மாவோட திட்டூசி கொஞ்சம் வலிச்சிது… இல்ல தாயி.. இப்ப தா தாயி போனேன்.. எம்புட்டு நேரம் தா… படுத்துட்டே கிடக்கறது.. அதேன்.. சித்த நேரம் சன்னல பார்க்கலாம்னு அங்கிட்டு நின்னேன்..

அப்பாடா நர்சம்மா போயிட்டாங்க… நீங்க இருக்கீங்களா சாமி?? ஆங்… எங்க விட்டேன்..

எங்க ஊருல விவசாயமும் தரிசா போச்சுங்க சாமி… மழை இல்ல.. இருந்த கொஞ்ச நஞ்ச கிணத்து தண்ணியையும்.. இறால் பண்ணை வைச்சி.. உப்பாக்கிட்டாக… ஊருல பாதி சனங்க பொழப்பு தேடி ஊரை விட்டே போயிட்டாக.. நான் மட்டும் தா… பொறந்த மண்ணை உட்டுட்டு போகாம கிடக்கேன்..

என்னோட நிலமைய பார்த்து ஒரு கந்து வட்டிக் காரரு… நிறைய பணம் கிடைக்கிற பொழப்புன்னு சொல்லி ஒரு டாக்டரம்மாட்ட கூட்டி வந்தாரு…. அந்த டாக்டரம்மா ஏதேதோ இங்கிலிபீசுல பேசிச்சி.. என்னென்னவோ சோதனையெல்லாம் பண்ணிச்சி..

கடைசில…. என் முன்னாலயே… யாருக்கோ போன் போட்டு பேசிச்சி.. அது இன்னும் நியாபகம் இருக்கு…

“…… ஆங்… ஆமா ஆமா… நல்ல சிகப்பா.. ஆரோக்கியமா தான் இருக்கா.. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு… உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் ஒரு குழந்தை கிடைச்சிடும்… கவலைய விடுங்க… பேசின மாதிரியே மீதி விசயம் எல்லாம்.. ஆங்.. நான் பார்த்துக்கறேங்க.. இனி அஞ்சக்கா என்னோட கண்ட்ரோல்ல தான் இருப்பா..”

டொக்..

என்ன பேசினாங்கன்னு புரியாட்டியும் எனக்கு என் பேரு வந்ததும் தான் புரிஞ்சிது.. என்னைப் பத்தி தான் பேசியிருக்காங்கன்னு… என்னை சிகப்பா ஆரோக்கியமா இருக்கான்னு சொன்னது… கொஞ்சூண்டு சந்தோசமா இருந்துச்சு… எம் புருசன் கூட இப்படியே தான் சொல்லுவாரு… ஏ செவப்பி செவப்பின்னு…. நான் போயா கருப்பா கருப்பான்னு எடக்கு மடக்கா பேசிக்குவோம்… ஹூம்.. எல்லா ஒரு காலங்க…

என்னை வெளியே இருக்க சொல்லிட்டு.. கந்து வட்டிக் காரரோட டாக்டரம்மா ஏதோ சொன்னாக… என்னை கூப்பிட்டு.. நாளைக்கு வெள்ளனே வந்துடும்மா.. வேலை இருக்கு… விவரத்த இவரு சொல்லுவாரு.. அப்படின்னுட்டாக..

வெளியே வந்ததும் தான் சொன்னாக… ஏதோ ஒரு பணக்கார ஊட்டு எசமானிக்கு குழந்தையில்லையாம்… என்னை அவுக புருசனோட குழந்தையை பெத்துத் தந்தா அவுக லட்ச லட்சமா பணம் தருவாகலாம்.. இந்த ஒரு வருசத்துக்கு எனக்கு சோறும் துணியும் தந்துடவாங்கலாம்..

கந்துவட்டிக்கார அண்ணாத்தே சொல்ல சொல்ல… எனக்கு.. உடம்பு நடுங்கிப் போச்சு… என்ர புருசன் செத்த சோகமே என்னை இன்னும் வாட்டிட்டு இருக்கு.. இதுல இப்படி ஒரு கொடுமையா அப்படின்னு நினைச்சி தேம்பினேன்…

வேற வழி இல்ல அஞ்சம்மா.. நீ காலத்துக்கும் பாடு பட்டாலும் இந்த காசைப் பார்க்க முடியாது… பேசாம ஒத்துக்கோ.. ஒரு குழந்தையில்லாத பொண்ணுக்கு உதவியதா நினைச்சிக்கோ… குழந்தை உருவாகற வரைக்கும் தானே.. அப்புறம் உன்னை யாரும் தொல்லை செய்ய மாட்டாங்க… புரிஞ்சிக்கோ..

டாக்டரம்மா என்னன்னவோ சொன்னாங்க.. என்னென்னமோ தந்தாங்க… என்னோட மூனு வயசு நடந்துட்டு இருக்குற குழந்தை குயிலரசி கண்ணுல வந்து வந்து போச்சு… அவ எதிர்காலத்தை நினைச்சிப் பார்த்து இந்த செயலுக்கு வேண்டா வெறுப்பா ஒத்துட்டேன்..

என்னோட புள்ள குயில.. கான்வெண்டுல படிக்க வைப்பதா வேற சொன்னாங்க.. என்னோட கஸ்டம் என்னோட போட்டும்.. அப்படின்னு ரொம்ப கஸ்டப்பட்டு ஒத்துக்கிட்டேன்.. குயில ஏதோ காப்பகத்துல கொஞ்ச நாள் இருக்கட்டும்னு சொன்னாக.. அழுகை முட்டிட்டு வந்துச்சு.. அவளை ஏதோ சொல்லி சாக்காட்டி விட்டுட்டு வந்துட்டேன்.. பாவம் என்னோட குயிலு… இரண்டு நாளா அழுதுட்டே கிடந்திருக்கு.. பச்ச மண்ணுதாங்களே..

அடுத்த நாளே.. ஏதோ ஒரு பங்களாவுல தங்க வைச்சாங்க… அந்த பணக்கார எசமான் வந்து வந்து போயிட்டு இருந்தாரு..

ஒரு மாததுக்கு ஒரு முறை வந்து பரிசோதனை செய்து பார்த்துக்க அழைச்சி போனாங்க.. உண்டானது உறுதியானதும்.. என்னை தனியா ஓர் அறையில் வைச்சிட்டாங்க..

தேவையான எல்லாத்தையும் ஒரு மிசின் மாதிரி செய்ய சொன்னாங்க.. நடைப் பயிற்சி.. உணவுக் கட்டுப்பாடு.. இன்னும் என்னென்னமோ..

அப்பப்போ அந்த எசமானியம்மா வந்து.. என் வயித்தை தொட்டுப் பார்த்து பூரிச்சிட்டு போகும்..

என்ன இருந்தாலும் என்னோட குழந்தையில்லையா… பெத்துக் கொடுத்துட்டு போயிடனும்… வயித்துல இருக்குற குழந்தை மேல பாசம் வளர்த்த கூடாதுன்னு கண்டிசன் போட்டிருந்தாலும்.. எனக்கு பாசம் வைக்காம இருக்க முடியல..

அப்பப்போ வயித்துக்குள்ளே காலை எட்டி உதைச்சிட்டு என்னை செல்லமாய் சீண்டிட்டே இருந்தது குழந்தை.. என்னமோ என்ர உசிர உலுக்கிச்சி… குயிலுக்கு ஒரு தம்பின்னு சொல்லி பூரிக்கவும் முடியல.. அதே நேரத்துல.. அந்த உயிரு என் வயத்துல நெளியர சந்தோசத்தை சொல்லவும் முடியல…

பணம்.. புள்ளைய பெத்துக் கொடுத்ததும் தான் தருவோம்… அப்படின்னு சொன்னாக.. குயிலு பேருல பேங்குல போட்டுவிடுறோம்னு எசமானியம்மா தான் சொன்னாக… பெரியவங்க தப்பாவா செய்ய போறாங்க.. போடுங்கன்னு சொல்லிட்டேன்..

இந்த காலத்துல ஒத்த புள்ளைய படிக்க வைச்சி பெரியவளா வளர்க்கறதுக்கு இது தான் வழியான்னு நான் கஸ்டத்துல இருந்தப்ப… விலகிப் போனங்க எல்லாம்.. எனக்கு காசு வரப் போகுதுன்னு தெரிஞ்சதும்… இது எவ்வளோ பெரிய தியாகம்.. அஞ்சக்கா மாதிரி வருமா அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சி ஒட்டிக்கிட்டாங்க..

ஒன்பது மாசம் முடிஞ்சி இடுப்பு வலி வந்து… ஒரு வாரம் முன்னாடி தான் ஒரு ஆம்பள புள்ளைய பெத்தெடுத்தேன்.. எசமானியம்மா மாதிரியே இருந்தான்… அவுங்க ரெண்டு பேரும் வந்து.. கைப் பிடிச்சிட்டு ‘ஓ’ன்னு அழுத்துட்டாங்க.. என்னோட குழந்தைய அவுங்க அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்க.. எனக்கு தான் என் உசிரே போற மாதிரி கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு வந்துச்சு… என்னை ஒரு அறையில் வைச்சி.. அப்பப்போ குழந்தைய என்கிட்ட கொடுத்து தாய் பால் கொடுக்க சொன்னாங்க..

இப்போ… உடம்புக்கு ரொம்பவே சோர்வா இருக்கு… மனசுல செஞ்சது சரியா தப்பான்னு ஒரு கேள்வி எழுந்துட்டே இருக்கு..

எதோ குழாய்ல.. குழந்தையை உருவாக்கறதெல்லாம் வேணாமாம்.. அது வேற யாரோடனே தெரியாதாம்.. தன்னோட புள்ள தன் ரத்தமா இருக்கனும்னு தான்.. இந்த எசமானரையா இப்படி என்னை தங்க வைச்சாரு.. முன்னெல்லாம் இன்னொரு பொண்டாட்டியே கட்டிப்பாங்க.. அதுல சொத்துல இருந்து எல்லாத்தலயும் சிக்கி காலத்துக்கும் தொல்லையிங்கறத தால.. இப்படி செய்யறாங்கன்னு பக்கத்து வீட்டு… ராசாத்தியக்கா பார்க்க வந்தப்ப சொன்னாங்க.. அப்படி சொல்லையில அவுங்க முகம் போன போக்கை பார்க்கனுமே…

எனக்கே ஒரு மாதிரியாயிடிச்சி… வாடகை தாயின்னு இதுக்கு பேராம்.. ஆனா.. எனக்கு நடந்த விசயம் அதில்லையாம்… அதை விட கொடுமையாம்னு எல்லாம் ஏதோ அதிகம் படிச்சவங்க சொல்றாங்க…

எனக்கென்னங்க சாமி தெரியும்… என்னோட குயிலு கண்ணுக்காக.. கடன்காரங்கிட்ட ஏச்சு வாங்காம மானத்தோடு பொழைக்க இது தான் இன்னிக்கி நல்லா போயிட்டு இருக்கற தொழிலாம்..

என்னோட அறைக்கு பக்கத்து அறையில இருக்கற பத்மாக்காவும் இதே மாதிரி தானாம்.. இது அவுங்களுக்கு மூனாவது பிரசவமாம்.. முதல் தடவைனா ரொம்பவே அதிகமா காசு தருவாங்களாம்.. இப்போ ரொம்ப கம்மியாம்… ரொம்பவே குறைபட்டுக்கிச்சு பத்மாக்கா…

வர வர… நல்லா சிரிச்சி கூட நாளான மாதிரி வெறுமையா தோணுது… ஏதோ ஜெயிலுக்குள்ளேயே இருக்கற மாதிரி… இந்த கம்பியை எண்ணிட்டு எத்தனை அஞ்சக்கா இப்படி இருக்காங்களோன்னு நினைக்கிறப்ப மனசு துடிக்குது… அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு புலம்பி தீர்த்துட்டேன்…

உங்களுக்கு நேரமிருந்தா என்னோட குயிலுக்குட்டியை பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு போங்க.. ஆனா என்னைப் பத்தி மட்டும் சொல்லிடாதீங்க… என்ர கஸ்டம் என்னோட போகட்டும் சாமி..

பின் குறிப்பு:

ஓர் உண்மைச் செய்தியின் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனைக் கதை.
__________________
--- பூள்.

2 comments:

சிறுகதை said...

எல்லாம் அருமையாக இருக்கிறது, உங்களின் வார்த்தைகளில் இருந்து உங்களின் எழுத்தாளுமை புரிகிறது, உங்களின் கதை கருக்களில் இருந்து உங்களின் ரசனை புரிகிறது. உங்களின் கவிதைகளில் இருந்து உங்களின் தமிழ் புரிகிறது,

வாழ்த்துக்கள் பூமகள்..... பூக்களுக்கு நடுவில் இருப்பதினால் தான் இந்த ரசனையோ..... தொடருங்கள்..........தக்ஸ்

பூமகள் said...

நன்றிகள் கோடி தக்ஸ்..

நான் உங்கள் அளவுக்கெல்லாம் கிடையாதுங்க... எழுத்தாளுமை அப்படி இப்படின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க தக்ஸ்..

படைப்புலகில் இப்போது தான் என் பயணம் தொடங்கியிருக்கிறது..
இலக்கிய, இலக்கண வாசனை அதிகம் எனக்கில்லை.. ஆயினும்.. நல்ல படைப்புகள் படைக்க வேண்டுமென்ற உத்வேகத்தில் என்னாலான முயற்சிகளை தொடர்கிறேன்.

உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

மீண்டும் வருகைக்கு நன்றிகள் தக்ஸ். :)