RSS

Tuesday, July 1, 2008

கவிதையாய் ஒரு கதை..!

முன்குறிப்பு:

ஆன்றோர்களே.. சான்றோர்களே..!!

ஒரு வித்தியாசமான முயற்சியில் பூ எடுத்து வைக்கும் முதல் சுவடு இக்க(வி)தை..!!

இங்கே.. கவிதையைத் தேடினீர்களானாலும்.. கதையைத் தேடினீர்களானாலும் இரண்டில் பாதியேனும் கிடைக்குமென்ற நம்பிக்கையில்.. பதிக்கிறேன்..

உங்களின் பொன்னான நேரத்தை இப்பதிவைப் படிக்கச் செலவிடப் போவதற்கு முன்கூட்டிய நன்றிகள்..!

---------------------------------------------------------------
கவிதையாய் ஒரு கதை..!


சொல்லாமல் என்றோ
சென்றதை..
மறக்காமல் தன்நாசி
சிவக்க... காத்திருந்தது..
வான வில்(லி)..

எங்கோ பெய்யும்
மழை தாண்டி
ஏதோ ஈரம்
அடிமனம் கசியவைத்தது..


வெட்டுக் கிளி
வெட்டாயிலைகள்..
தன் அரையுடல்
ஆடையுடன்..
வேருக்கு விருந்தாக்கும்
முனைப்பில்..


கவனிப்பதை
கவனிக்காதது போன்று
கவனித்தன..
தோள் சாய்ந்து சிரிக்கும்..
மலர்மொட்டுகள்..

கண்ணாமூச்சு ஆடும்
கதம்ப பூக்களின் மேல்
கவனம் போகவில்லை..


இத்தனை வருட
இல்லறத்தில்..

இரும்புக்கரம் எழுந்து
இதுவரை படிந்ததில்லை..
படியுமளவு நான்
பயணித்ததுமில்லை..

எழில் என் வாழ்வில்
வந்த பின்..
பொழிலுக்குப்
பஞ்சமில்லை..

மூன்றாண்டுகால
இணையோட்டத்தில்..
ஓரெண்ணம்..
ஓர் வாக்கென
இருவர் ஒருவராக..


இன்று மட்டும்
ஏன் இப்படியெல்லாம்?

மென் பொருளில்..
மென்மையிழக்கும்..
கலையின்
கண்கள் இறுக்க
மூடித்திறந்தன..

உறுத்தும் வலி
கண்ணிலா மனத்திலா??


காலையில் வெடித்த
கலவரம்..
கண் முன் வந்துபோனது..


ஆத்திரம் தாளாமல்
அடி வைத்த கை..
இன்னும் சிவந்தபடியே...

ச்சே.. மனம் திட்டி
மாண்டது...
எத்தனை வலித்திருக்கும்..
எழிலுக்கு...!!


நன்கு புரிந்தபின்..
நாலாமவர் போல்
சிந்தை சிதற
என்ன காரணம்??

புரிதல் பிரச்சனையா..
புரிவித்ததில் பிரச்சனையா..
புரியாமலே கலை புலம்பியபடி..
இரு நாட்களாக..
இல்லம் வர தாமதமான
இடைக்கால பணிப் பளு..


அலுவலகத் தோழி..
அவசரத்தில் உதவி கேட்க..
அழைத்துச் செல்ல வேண்டிய
கட்டாயச் சூழல்..


தாமிருக்கும் இருக்கை..
தனக்குமட்டுமென
பாசப் பைந்தமிழ்
எழிலின் குரல்..
ஓரத்தில் ஒலித்தது..


சூழலும் காரணமும்..
சுத்தி வளைத்து
இருதலைக் கொள்ளி
எறும்பாக்கியது..


காட்சிகள் மாறாமல்..
துணையுடன் பகிர்ந்த பின்பும்..


பாசத்தில் வார்த்தைகள்
தடிக்கத் தவறவில்லை..

தடித்த வார்த்தைகள்..
தன் கோடு தாண்டுகையில்
கையும் கொஞ்சம் நீண்டு
தணிந்தது..

பாச எல்லையும்
சந்தேக எல்லையும்
அருகருகோ??


குழப்பத்தில் மனம்..
குழந்தைகள் ஓட்டத்தை
பார்த்து ஓடாதிருந்தது..

ஏழு தாண்டி..
அரை கூட்ட
காத்திருந்தது காலம்..


கலங்கும் நெஞ்சுடைந்து
காயமுற்று நானிருக்கையில்..
கயலவள் தோழியானாள்..


எட்டு வைத்து
ஏற்றம் காண..
தட்டிக் கொடுக்கும்
தங்க தோழமை..


தங்கம் கூட
உரசினால் தான்
உண்மையென
ஊர்ஜிதமாம்..

மென் கட்டிட வல்லுநராக
என் தரமுயர..
அழைப்பின்றி விருந்தினராக..
வந்து சேர்ந்தது..
பணிப்பளுவும்..
நேரப் பஞ்சமும்..


நாளில் முக்காலை
அலுவலகம் விழுங்க..
கால் பங்கில்
குடித்தனம் செய்ய..
தூங்கவா..?
தன்னிலை விளக்கம்
தாக்கல் செய்யவா??


எண்ணவோட்டம்
எங்கோ போக
கலைத்திருந்த..
பூக்களோடு
கலையும் சேர்ந்திருந்தார்..


மெல்ல மாயும்
இருள் தோண்டி..
வெளிச்சம் வர துவங்கியது
மனத்தில்..


நேரவாளுமையும்
திறந்த மனமும்..
தெளிந்த சிந்தையும்
துணையாக்கும் வழி
கலை மனம் அடைந்தன..


களைத்த முகம்..
களையானது..


அன்பின் அரிச்சுவடை
அறியப்படுத்த..


பூக்களோடு கைநிறைய..
புன்னகையும்..
சேர்த்து எழிலோடு
தொடுக்க..
எத்தனிக்க..

துவங்கியது..
கலைப்பயணம்..!!__________________
--- ள்.

0 comments: