RSS

Wednesday, March 25, 2009

செவத்தம்மா....!

செவத்தம்மா

கலைத்துப் போடப்பட்ட கீரைக் குவியல்களைக் கட்டுகளாக்கி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள் செவத்தம்மா...

வயது கண்டுபிடிக்க இயலாதபடி உழைப்பின் வனப்பு அவள் உடலெங்கும் மேவியிருந்தது...
அதிகாலையில் மார்கெட் சென்று அன்றன்று வந்த காய்கறிகளில் எவை மலிவோ அவற்றை ஒரு கூடையில் வாங்கி மாலைக்குள் விற்று காசு பார்ப்பது செவத்தம்மாவின் அன்றாடப் பிழைப்பு..

இன்றும் அப்படித்தான்.. இருக்கும் சொற்பக் காசுக்கு கீரை மட்டுமே கிட்டியது.. அகத்திக் கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை, அரைக் கீரை, சிவப்புக் கீரை, சுக்குட்டி(மணத்தக்காளி) கீரை, நினைவாற்றல் கொடுக்கும் வல்லாரைக் கீரை, புதினா இப்படி கட்டுகளை அடுக்கி தலையில் சும்மாடு இட்டு கூடையை மேலே தூக்கி தாமே வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்..

"கஞ்சி காய்ச்சி அங்கன வைச்சிருக்கேன்... உச்சி வெயில் வாரக்குள்ள நான் போயி கீரையை வித்துட்டு வந்துடறேன்.. தண்ணி எதுனா வேணும்னா உன் கை பக்கத்துல சொம்பு இருக்கு.." - என்று வீட்டிலிருக்கும் தன் கணவன் காளையனுக்குச் சொல்லிவிட்டு வியாபாரத்துக்கு தயாரானாள் செவத்தம்மா..

"ஏ.... கீரை வாங்கலையோ கீர....... அரைக்கீரை.... வல்லாரைக் கீஈஈஈரை......... வெந்தயக் கீரை... அகத்திக் கீரைஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ........" கூவியபடியே சென்று கொண்டிருந்தாள் செவத்தம்மா...


பக்கத்து மூன்று நான்கு தெருக்கள் சுத்தினா தான் பாதிக் கூடையாவது காலியாகும்... இன்னும் எம்புட்டு தூரம் தான் நடந்துட்டே இருக்கறது... என்று வழிந்த வேர்வையைத் துடைத்தபடியே தளர்ந்த நடையில் நிழல் தேட ஆரம்பித்தாள் செவத்தம்மா...


தூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் நொங்கு விற்பவர் நிற்க.... அந்த திசை நோக்கி செல்லலானாள்..

கூடையை இறக்கி.. ஆலமர வேர்களின் மேல் அமர்ந்து கொண்டாள்.. நொங்கு விற்பவரிடம் திரும்பி.. "ஐஞ்சு ரூபாய்க்கு நொங்கு தாங்கண்ணே" என்றாள்..

ஆறு நொங்குகள் தோண்டிக் கொடுக்க... மூன்றை உண்டுவிட்டு.. மூன்றை தன் கூடையிலிருக்கும் பாலிதீன் பையில் சேமித்தாள்... தாகமெடுக்கவே.. மூன்று ரூபாய்க்கு தெளுவு வாங்கிக் குடித்துவிட்டு.. மறுபடி கூடையை எடுத்து தலையில் வைத்து நடக்க ஆரம்பித்தாள்..

பின்னாலிருந்து யாரோ தன்னை கூப்பிடுவது போல் தோன்றவே.. திரும்பிப் பார்த்தாள்..

தூரத்திலிருந்து ஒரு உருவம்..

"ஏலே செவப்பி.. செவப்பி.. " என்ற படி ஓடி வந்து கொண்டிருந்தது..

அருகில் வந்ததும்.அடையாளம் கண்டு கொண்டாள் செவத்தம்மா...

"நீ... நீங்க.... தங்கவேலு தானே.." என்று அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டாள் செவத்தம்மா...

"ஆமா செவப்பி... நானே தான்.. என்னை மறக்காம நியாபகம் வைச்சிருக்கியே அது போதும் புள்ள.... எப்படி இருக்கே... ஏன் இப்படி ஆயிட்டே" என்றான் தங்கவேலு..

"எப்படி ஆயிட்டேன்... நான் நல்லாத்தானே இருக்கேன்" என்று கலங்காமல் பதிலளித்தாள் செவத்தம்மா..

"உன்னை இப்படி பார்க்க மனசு கேக்கல புள்ள... என் கூட வந்துடு.... நான் உன்ன ராணி மாறி பார்த்துக்கறேன்... உன்னை எப்படி எல்லாம் தாங்கனும்னு கனவு கண்டேன்.. இப்படி இருக்கியே புள்ள..." என்றான் தங்கவேலு..

பதிலேதும் பேசாமல் புன் சிரிப்பொன்றை உதிர்த்தாள் செவத்தம்மா...

"செவப்பி.... உன்னை பிரிஞ்சி போனேனே தவிர... நீ இல்லாத வாழ்க்கைய நான் நினைச்சி கூட பார்க்கல புள்ள... என் கூட வந்துடு.. போதும் நீ பட்ட கஷ்டமெல்லாம்..."

"என் மாமா மவன் என்ன கண்ணாலம் கட்டிக்கிற வரைக்கும் கண்ண தொறந்துட்டு பார்த்துட்டு தானே இருந்தே.. அப்போ வந்து தடுத்து என்னை கண்ணாலம் கட்டியிருக்கலாமில்ல.. அப்ப இல்லாத வீரம் இப்போ எங்கிருந்து வந்துச்சு?" கொஞ்சம் கோபத்தோடே பேசலானாள் செவத்தம்மா..

"அப்போ இருந்த நிலமைல.. என்னால ஊரை எதிர்த்து.. உன் மாமா மவன் காளையனை எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியல செவப்பி... என்னை மன்னிச்சிரு.. இப்போ இம்புட்டு கஸ்டப்பட்டுட்டு இருக்கற உன்னைப் பார்க்க மனசு கேக்கல.... நான் இப்போ பெரிய முதலாளி ஒருத்தர்ட்ட டிரைவரா இருக்கேன்.. இருக்க வீடு.. சாப்பாடு எல்லாம் அவுக தர்றாங்க... என் கூட வந்துடு புள்ள..... நாம டவுனுக்கு போயிடலாம்..." என்றான் தங்கவேலு...

நிதானமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த செவப்பி....

"உனக்கும் எனக்கும் இருந்த நேசம் என்னிக்கோ காணாம போச்சுது.. எனக்கு பிடிச்சோ பிடிக்காமையோ என்னோட கண்ணாலம் நடந்துச்சு.. ஆனா இப்ப நான் நிம்மதியா இருக்கேன்.... என்னை மறந்துடு தங்கம்..." குரல் உடையாமல் கணீரென வந்தது செவப்பியிடமிருந்து...

பதிலேதும் பேசாமல் தலையைத் தொங்க விட்ட படியே.. திரும்பி நடக்கலானான் தங்கவேலு....

வெகு தூரம் தங்கவேலு தலை மறையும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தவள்.. கண்களில் கண்ணீர் கசிய தன் முந்தானையால் துடைத்துக் கொண்டபடியே பிழைப்பைப் பார்க்க நடக்கத் துவங்கினாள்...

உச்சி வெயில் தலையில் அடிக்கும் நேரத்தில் தானிருக்கும் குடிசை வந்து சேர்ந்தாள் செவப்பி...

கண் மூடி கிடந்த காளையன், சட்டென விழித்துக் கொள்ள...

"நான்தாங்க... குடிக்க சாப்பாடு கரைச்சிட்டு வர்றேன்.. சேர்ந்தே சாப்பிடலாம் மாமா" என்றாள் செவத்தம்மா...

"சரி செவத்தம்மா...." என்று சொல்லி தலையசைத்தான் காளையன்.. அவர் நினைவுகள் பின்னோக்கி சென்றது..

"அடியே மூதேவி... உனக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்... புருச குடிச்சிட்டு வர்றப்போ... எதுனாச்சும் கறி செஞ்சி வைக்கனும்னு.. இப்படி அன்னாடும் கஞ்சி காய்ச்சி வைச்சா என்னாடி அர்த்தம்...." என்று நாக்கைக் கடித்தபடி.. தன் காலால் செவத்தம்மாவை எட்டி உதைத்தான் காளையன்..

"ஏண்டா அந்த புள்ளய இப்படி போட்டு அடிக்கிற... அவ தாயில்லாத புள்ளன்னு தான் உனக்கு கட்டி வைச்சேன்... நானே இப்போ அந்த புள்ள வாழ்க்கைக்கு கேடு செஞ்சிட்டேனே" என்று புலம்பினார் சிவப்பியின் தாய்மாமன்..

தினம் தினம் நடக்கும் யுத்தத்தைப் பார்த்துப் பார்த்தே சீக்கிரத்தில் இறந்து போனார் சிவப்பியின் தாய்மாமா..

இது நடந்த சிறிது நாட்களில் தான்.. ஒரு நாள் காளையன் குடித்துவிட்டு தாறுமாறாக நடந்து வந்து கொண்டிருக்க.. ஒரு லாரி ஏறி இரு கால்களும் துண்டிக்கப்பட்டது...

நிறைய கடன் வாங்கி சிவப்பி தன் தாலியைக் காப்பாற்றினாள்.. அன்று முதல் இன்று வரை செவத்தம்மாவின் வாழ்க்கை இப்படித் தான் போய்க்கொண்டு இருக்கிறது..

காலையிலேயே கணவரைக் குளிக்க வைத்து... கஞ்சி கொடுத்து படுக்க வைத்துவிட்டு விற்பனைக்கு போனால்... மதியம் தான் வீடு திரும்புவாள்..

ஒரு தட்டில் பழைய சாப்பாடு போட்டு.. தயிரை ஊற்றி.. கரைத்து ஒரு குவளைச் சாதத்தை கையில் ஏந்தி தன் வாயருகே நின்றிருக்கும் செவத்தம்மாவைப் பார்த்து கண்கள் பனித்தது காளையனுக்கு...

"மாமா... உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாரு... நொங்கு மாமா..... உனக்கு ரொம்ப புடிக்கும்னு வாங்கியாந்தேன்... என்ன மாமா.. வேர்க்குதா.. இரு பனையோலை விசிறி வீசி விடுறேன்.... . " என்று எழுந்தவளின் கையைப் பற்றி விம்மி அழ ஆரம்பித்தான் காளையன்..

"என்ன மாமா இது சின்ன குழந்தையாட்டம்.... அழாம சாப்பிடு... காலு வலிக்குதா?" என்று வாஞ்சையாக தலை கோதினாள் செவத்தம்மா...

செவத்தம்மாவின் பாசக் கவனிப்புகளால் அன்றிரவு முழுதும் தூங்காமல் கிடந்தான் காளையன்..

மறு நாள் வழக்கம் போலவே புலர்ந்தது.... காளையனைக் குளிப்பாட்டி கஞ்சி குடிக்க வைத்துவிட்டு.. நகர்ந்த செவப்பியை அருகில் அழைத்தான் காளையன்..

நெற்றி அருகில் முத்தமிட்டு.. "போயிட்டு வா செவத்தம்மா" என்றான் காளையன்..

என்றுமில்லாமல் இன்னிக்கி மட்டுமென்ன புதுசா நடக்குது என்று எண்ண நேரமின்றி.... வியாபாரம் பார்க்க... கிளம்பினாள் செவத்தம்மா..

உச்சி வேளையில் மத்தியான சாப்பாட்டுக்கு வீடு திரும்ப.... அங்கு அசைவற்ற நிலையில் படுத்திருந்தான் காளையன்... வாயில் பச்சை நுரை தள்ளியிருந்தது... ஓடிச் சென்று துடைக்க முந்தானை எடுத்தவளுக்கு அருகில் ஒரு கடிதம் அவர் தலைமாட்டருகே படபடத்தபடி இருந்ததைக் கண்டாள்... அதிர்ச்சி கலையாத முகத்துடன் அந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்..

"அன்புள்ள செவத்தம்மா...

இத்தன நாளும் உனக்கு பண்ணுன கொடுமைக்கெல்லாம் தான் சேர்த்து எனக்கு ஆண்டவன் இந்த தண்டன கொடுத்துட்டான்... ஆனா நான் சொகமா படுக்கையில படுக்க.. நீ தான் தெனமும் கஷ்டப்பட்டுட்டு இருக்கே....

நான் பண்ணுன கொடுமை இப்போ உன்னைத் தான் வாட்டுது.... எனக்கு நானே தண்டன கொடுத்துக்கலாம்னு பல நாள் யோசிச்சிருக்கேன்.. ஆனா நீ அனாதையா போயிடுவியோன்னு பயமா இருந்துச்சு.. ஆனா அன்னிக்கி தங்கவேலைப் பார்த்ததுக்கப்புறம்... எனக்கு நிம்மதி வந்துடுச்சி.... அவன் தான் உனக்கு சரியான புருசனா இருக்க முடியும்... நீ அவனைக் கண்ணாலம் கட்டிக்கோ.. அதுக்கு நான் இடையூறா இருக்க விரும்பல.... அதான் நீ கொடுத்த கஞ்சில... வீட்டைத் துடைச்சு விட வைச்சிருந்த பச்சை சாயத்தைக் கலந்து குடிச்சிட்டேன்.....

நான் பொறந்தது முதல் என் ஆத்தாவை நான் பார்த்ததில்ல... உன்னை என் ஆத்தாவாப் பார்க்கறேன்.. அடுத்த ஜென்மத்துல உந் வயத்துல புள்ளையா பொறக்கனும் புள்ள.... நல்லா இரு.... இந்தப் பாவியோட கடைசி ஆசைய நிறைவேத்து புள்ள....

உன்னோடு வாழத் தகுதியில்லாத,
காளையன்."

-----என்று கிறுக்கலான கையெழுத்தில் எழுதி முடித்திருந்தது.. கடிதத்தின் இறுதியில் காளையன் என்ற எழுத்துகள் கண்ணீரால் அழிந்திருந்தது...

கண்களில் நீர் பெருக...." ஹையோ இப்படி பண்ணிட்டீங்களே...ஏஏஏஏஏஏஏஏஏஎ................." என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தாள் செவத்தம்மா...


கொஞ்ச நாள் கழித்தது....

"ஏலே செவத்தம்மா... வல்லாரைக் கீரை இருக்கா... கட்டு என்ன வெல??" என்று மச்சுவீட்டம்மா கேட்க..


"இருக்குமா... கட்டு ஐஞ்சு ரூபா தாயி..... " என்று கூறிக் கொண்டே கூடையை இறக்க ஆயத்தமானாள் செவத்தம்மா....

(முற்றும்)

[ இக்கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அதற்கான சுட்டி இதோ.
'செவத்தம்மா' ]
__________________
-- பூமகள்.

Thursday, March 19, 2009

டேக் ஆஃப்...!!டேக் ஆஃப்
கோவை விமான நிலையம் இரவு 10 மணிக்கு இருள் அப்பிய சுவர்களுக்கு மின் விளக்குகள் கொண்டு வெளிச்சம் ஒட்ட வைத்துக் கொண்டிருந்தது..


வெளிச்சக் கீற்றுகள் உள்ளிருக்கும் தரையைப் பளிங்கு போல் காட்டிக் கொண்டிருந்தது..


மெல்ல தனது பயணச் சுமைகளைத் தள்ளியபடியே வெளி வராண்டாவில் தமக்கான விமான எண் டிஸ்ப்ளேயில் வரக் காத்திருந்தனர்..


இரு பெரிய பைகளுடன் அவ்விருவரும் பயணிகளோடு பயணிகளாக கலந்துவிட்டிருந்தனர்..


அவ்விருவரில் ஒருவர் கருப்பு ஜர்கின் போட்டிருந்தார்.. அவர் அருகிலிருந்த வெளிர் நீல ஜீன் அணிந்தவருக்கு தன் கூரிய கண்களால் சிக்னல் காட்டிய வண்ணம் இருந்தார்..


மார்கழிக் குளிர் ஜீன் அணிந்திருப்பவருக்கு மெல்ல நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.. குளிரில் நடுங்கினாலும் உள்ளே நடக்கப் போகும் நிகழ்வுக்கான ஒத்திகையை மனம் ஒருபுறம் மனத்துக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது..


இரவு 10.30 மணி..


அவர்கள் செல்ல வேண்டிய சிங்கப்பூர் விமானத்தின் எண் டிஸ்ப்ளே போர்டில் வர.. பரபரப்பானது பயணிகள் கும்பல்..


இவர்கள் இருவரும் பயணிகளோடு சக பயணியாக உள்ளே நுழைந்தார்கள்..


வெளிக் காவலரிடம் பாஸ்போர்ட்டும் பயணச் சீட்டையும் காட்டிய பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்..


பயணிகள் தத்தம் பைகள், சூட்கேசுகள் கொண்டு ஒருபுறம் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்க...


இருவரும் சென்று வரிசையின் கடைசியில் நின்றனர்..


மெல்ல வரிசையின் நீளம் குறைய... இருவரும் தத்தம் பயணப் பொதிகளை சோதனைக்காக வைத்தனர்..


அவை ஸ்கேன் செய்யப்பட்டு தகுந்த லேபில் அணிவிக்கப்பட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அடுத்த இடத்துக்கு சென்றனர்..கொடுக்கப்பட்ட டேகுகளை தன் கையடக்க பையின் வாயைச் சுற்றி இறுக்கிவிட்டு.. தன்னுடன் வந்திருக்கும் ஜீன் அணிந்தரின் விவரங்களை ஒரு அட்டையில் எழுதிக் கொண்டிருந்தார் கருப்பு ஜர்கின் அணிந்த நபர்..


ஜீன் அணிந்தவர்.. அங்கும் இங்கும் நோட்டமிட்டபடியே தனக்குள் இருக்கும் படபடப்பை மெல்ல குறைக்க முற்பட்டுக் கொண்டிருந்தார்.. தன் வாழ்க்கையில் இதுவரை நடக்காத நிகழ்வாதலால் மனம் பதைத்தபடியே இருந்தார்..


அடுத்து இமிகிரேசன் கவுண்டர் சென்று தனது அடையாள அட்டையையும் அந்த நபரின் விவரங்கள் தாங்கிய அட்டையும் கொடுத்துவிட்டு.. இருவரின் பாஸ்போர்டையும் காட்டி உள் நுழைந்தார்..


இரவு 11.30 மணி..


வெகு நேர காத்திருப்புக்கு பின் முக்கிய சோதனைக்காக மீண்டும் வரிசையில் நின்றனர்..


சோதிப்பவர்களின் பரஸ்பர ஹிந்தியிலான நகைச்சுவை சம்பாஷனையை ரசித்தபடியே அத்தனை படபடப்பிலும் புன் முறுவல் செய்தார் ஜீன் அணிந்தவர்..


இருவரின் பயணப் பொதிகளையும் ட்ராலியில் தள்ளியபடியே கருப்பு ஜர்கின் போட்ட நபர் ஒருபுறம் செல்ல... ஜீன் அணிந்தவர் அடுத்த கதவிற்குள் நுழைந்தனர்..


இருவரும் சோதிக்கப்பட... கையடக்க பைகள் சோதனையிலிருந்து மீண்டு வந்தன.. அவற்றில் ஒன்றை வைத்துக் கொண்டு வெகு நேரம் யாருடனோ வாக்கி டாக்கியில் அந்த காவலதிகாரி பேசிய வண்ணம் இருந்தார்..


அவர் முகம் மாறியதையும்.. சம்பாஷனைகளையும் அரைகுறை ஹிந்தியில் புரிந்து கொண்ட ஜீன் அணிந்தவர் மனதுக்குள் அழ ஆரம்பித்திருந்தார்..


நடப்பதில் ஏதோ விபரீதம் வந்துவிட்டதை உணர்ந்த அந்த கருப்பு ஜர்கின்காரர்.. காவலர் பேசி வைக்கும் வரை காத்திருந்தார்..


இருவரையும் தனியே அழைத்து மெல்ல காவலர் பேச ஆரம்பித்தார்..


"உங்கள் பையில் என்ன வைத்திருக்கிறீர்கள்... சொல்லுங்கள்" இதை சற்று கடுகடு முகத்துடன் அதட்டலாக ஆங்கிலத்தில் காவலர் கேட்க...


"ஒன்றுமில்லையே.. துணிகளும் புத்தகங்களும் தான்" என்று கருப்பு ஜர்கின்காரர் குழப்பத்துடன் ஆங்கிலத்தில் உரைத்தார்..


"இல்லை.. அதில் விமானத்துக்கு ஊறு விளைவிக்கும் பொருளை வைத்திருக்கிறீர்கள்.. நானே சொல்லிவிடுவேன்.. நீங்களே ஒப்புக் கொண்டு விடுங்கள்.."


சற்று அதிக கடுப்பில் காவலர் சொல்ல..


நடு நடுங்கிப் போன இருவரும்.. எக்கு தப்பாக மாட்டிவிட்டோமே என்று விழி பிதுங்கிப் போயினர்..


"இல்லை சார்.. நாங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை.. தெரியாமல் ஏதேனும் இருக்கலாம்.. என்ன இருக்கிறதென்று சொல்லுங்கள்" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ஜர்கின் காரர் கேட்கவும்.. திபுதிபுவென மற்ற சோதனைப் பிரிவு காவலர்கள் அங்கு கூடவும் சரியாக இருந்தது..


அவர்களில் ஒருவர்.. கருப்பு ஜர்கின் அணிந்தவரை அழைத்து சூட்கேசின் தாழை எடுத்துவிடச் சொல்ல..


அது நீல ஜீன்காரரின் பை என்பதால் அவரை அணுகினார் கருப்பு ஜர்கின்காரர்.


மெல்ல நடுங்கும் கைகளோடு வேர்த்தபடியே பையைத் திறக்க..


அங்கு தேடி அந்த பொருளை அவர்கள் எடுத்தார்கள்..


பார்த்த இருவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது...


அது ஒரு முழ நீளத்தில் கூர்மையான ஆயுதமாக அமைந்திருந்தது.. இருவரின் இதயமும் வேகமாக அடிக்க ஆரம்பித்திருந்தது..


இன்னும் சற்று அதிக விசாரணைக்கு உட்படுத்த தனி அறைக்கு அழைத்து வரப் பட்டார்கள்..


முன் செல்லும் காவலர் பின்னே நடுக்கத்தோடே இருவரும் செல்ல.. காவலர் இருவர் அவர்களைப் பின் தொடர்ந்தனர்..


நீல நிற ஜீன்காரர் காவலர் பின் செல்கையில் மயங்கி விழ.. அவரை அவசரமாக விமான நிலையத்தில் இருக்கும் முதலுதவி செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல ஆவண செய்தார் காவலரில் ஒருவர்..


விசாரணை கருப்பு ஜர்கின் போட்டவருடன் சுமார் 20 நிமிடம் நீடிக்க.... இறுதியில் வேர்வை பூத்த முகத்துடன் தன் கைக்குட்டையைத் துடைத்து விட்ட படி.. வெளியேறினார்..


அறையை விட்டு வெளி வந்த காவலர்.. புன் முறுவலுடன் கருப்பு ஜர்கின் காரருக்கு கை கொடுத்து மன்னிப்பு கேட்டு.. வாழ்த்துகள் சொல்லி அவரை அனுப்பினார்..


நீல ஜீன் அணிந்தவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மயக்கம் தெளிந்த நிலையில் கருப்பு ஜர்கின் வெளிப்படும் இடத்துக்கு அருகில் அமரச் செய்திருந்தார்கள்..


விசாரணையில் ஈடுபட்ட காவலர், மற்றொரு காவலரின் காதில் ஏதோ சொல்ல.. அவர் ஜீன் அணிந்தவருக்கு அருகில் சென்று அவர் போகலாம் என்று அனுமதி அளித்தார்..


கருப்பு ஜர்கின் காரர், ஜீன் அணிந்தவரைக் கைத்தாங்கலாக பிடித்தபடியே விமானம் ஏற காத்திருப்போரின் வரிசையில் பயணப் பொதிகளுடன் நிற்கலானார்.


அதுவரை நடந்த எதையுமே நம்ப முடியாமல் இருந்த ஜீன் அணிந்தவர்.. ஆச்சர்யம் தாளாமல் அரை மயக்கத்திலேயே குழப்பத்தில் உடன் நின்றிருந்தார்..


நள்ளிரவு 12.10 மணி..


விமானத்தினுள் இருவரும் நுழைய... தமது சன்னலோர சீட்டுடன் ஐக்கியமானார் ஜீன் அணிந்தவர்..


விமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில்.. தனது சஸ்பென்ஸ் தாளாமல் நீல ஜீன் அணிந்தவர்..


"பரத்.., போலீஸ் விசாரணையில் என்ன கேட்டாங்க.. எப்படி தப்பிச்சீங்க??"


புன்னகைத்தபடியே.." அத ஏன் கேக்கற பாலா.. ஏதோ ஆயுதம் கடத்தறோம்.. விமானத்தையே ஓட்டை பண்ணப் போறோம்னு நம்மள நினைச்சிட்டாங்க.. எல்லாம் உன்னால தான்"


அதிர்ச்சி கலந்த குரலில்.. " என்ன..... என்னாலையா.....ஆஆஆஆஅ???????????" என்று தன் கண்கள் விரிய பாலா கேட்க..


"பின்னே.. நீ கொண்டு வந்த கையடக்க சூட்கேசில் தானே அந்த ஆயுதமே இருந்துச்சு.."


"என்ன பரத் சொல்றீங்க.."


"உன்னால நாம ரெண்டு பேரு கம்பி எண்ணியிருப்போம்.. ஏதோ அதிகாரி நல்லவரா இருக்க தப்பிச்சோம்.."


"புரியும்படியாத் தான் சொல்லுங்களேன்.."


"உன் கையடக்க சூட்கேசுல என்ன வைச்சிருந்த சொல்லு முதல்ல"


"கொஞ்சம் துணி.. ஐ பாட் டச்.. தாய் நாவல்... கொஞ்சம் இந்தியப் பணம்" அவ்வளவு தானே வைச்சிருந்தேன் என்று குழப்பத்தோடே பாலா.


"உன் பையில் இருந்தது..... ஒரு பெரிய மைகோதி.. அது எப்படி அதில் வந்துச்சு...?? நான் படிச்சி படிச்சி சொன்னேன்ல கையில் எடுத்து போகும் பையில் இதெல்லாம் இருக்க கூடாதுன்னு..." என்றார் பரத் பல்லைக் கடித்தபடி...


நடுங்கிய படியே... "ஹையோ... அது எங்க உள்ளே இருந்துச்சு... நான் கவனிக்கவே இல்லையே... எங்க வீட்டிலிருந்து உங்க வீட்டுக்கு வருகையில் கொடுத்துவிடப்பட்ட சூட்கேஷ் அது... எங்க பாட்டி ஏதேதோ வைச்சாங்க.. அது சடங்குன்னு சொன்னாங்க...... நான் எடுத்து வைக்காம அப்படியே எடுத்து வந்துட்டேங்க.... என் கண்ணுல அது படவே இல்லைங்க... என்னை மன்னிச்சிருங்க.." கண்களில் கண்ணீர் பொங்க பாலா சொல்ல...


"எனக்கு புரிந்தது பாலா.. அதைத் தான் காவலரிடம் விளக்கினேன்.. அவரும் அந்த மைகோதியை எடுத்து வைச்சிட்டு இனி கவனமாக இருக்கச் சொல்லி அனுப்பிட்டார்" என்று பாலாவை தன் தோளில் சாய்த்து தலை கோதியபடியே சொன்னார் பரத்.


பரத், பாலா இவ்விரு புதுமணத் தம்பதிகளையும் மற்றும் பல பயணிகளையும் ஏற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்த விமானம்.. விளக்குகளினால் வரையப்பட்ட எல்லைக்கோடுகளுடன் வெளிச்சக் காடாகத் தெரியும் இலங்கையின் அழகிய வடிவத்தினைக் காட்டியபடி சென்று கொண்டிருந்தது..


(முற்றும்)