RSS

Saturday, December 8, 2007

பருவநட்சத்திரங்கள்...! - நிறைவு

(எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.)

காமேஷின் கார், ஜிபி தியேட்டர் தாண்டி, நூறடி சிக்னலில் நின்றிருந்தது.

"அவளுக்கென்ன அம்பா சமுத்திரம்.. ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி தாழம்பூவென தளதளதளவென வந்தா வந்தாள் பாரு..!
அவனுக்கென்ன ஆழ்வார்க்குறிச்சி அழகுத் தேவரு அருவா மாதிரிபர்மா தேக்கென பளபளபளவென வந்தா வந்தான் பாரு............!"


- ஜில்லுனு சந்தோசமாக துள்ளல்ப் பாடலைக் கேட்டபடியே கலா- காமேஷ் ஜோடியைச் சுமந்த படி கார் பிரதான சாலையில் பயணப்பட்டிருந்தது.

கலாவின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்ததை குறிப்பால் உணர்ந்தான் காமேஷ்.

"கலா... ரொம்ப பசிக்குதுமா... நம்ம ஃபேவரட் அஞ்சப்பர் போயி காலை டிபன் முடிச்சிட்டு நேரே உங்க வீட்டுக்கு போவோமே..!" என்று கெஞ்சலாக சொன்னான் காமேஷ்.

"நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேங்க..! சரிங்க... அப்பாவும் அம்மாவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. உங்க மொபைல் கொடுங்க.. நான் வீட்டுக்கு போன் பண்ணி லேட்டா வர்றதா சொல்லிடறேன் " என்று சொல்லி காமேஷின் சட்டை பாக்கெட்டிலிருந்து
மொபைலை எடுத்து போன் செய்தலானாள் கலா.

அஞ்சப்பரில் காலை இடியாப்பம் சாப்பிட்டு முடித்து, நேரே கார் கோவைப்புதூரில் இருக்கும் கலாவின் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

தடபுடலான வரவேற்புடன் மதிய விருந்து முடிந்து இருவரிடமும் ஆசி பெற்று திரும்புகையில் மணி மாலை 5ஐக் கடந்திருந்தது.

கலாவின் முகத்தில் அன்பு இல்லத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி விவாதிக்க இது தான் தருணமென்று முடிவெடுத்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தான் காமேஷ்.

கலாவே ஆரம்பித்தாள். "ஏங்க.. நான் அப்பவே கேக்கனும்னு நினைச்சேன்... அன்பு இல்லத்தில் ஒரு பெரியவரைப் பார்த்தோமே... ரத்னவேல் ஐயா அவரை எப்படி உங்களுக்கு தெரியும்??".

காமேஷு மனதுக்குள் "அப்பாடா.." என்றான். காமேஷ் கேட்க தயங்கியதை கலாவே ஆரம்பிச்சது நிம்மதி அளித்தது.

உடனே காமேஷ், "அது இருக்கட்டும் கலா.. முதல்ல நீ சொல்லு... ஏன் அவரை நான் அறிமுகப்படுத்தறதுக்கு முன்னாடியே அவரைப் பார்த்து அதிர்ச்சியானே?? அவரை ஏற்கனவே உனக்கு தெரியுமா?" ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

கலா, உடனே... "ஆமாங்க..ஏற்கனவே அவரை பத்து வருடத்துக்கு முன்னால் பார்த்திருக்கேன்" என்றவாறு அனைத்து ஃபிளாஷ் பேக் நிகழ்வையும் சொல்லி முடித்தாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்.. .இவரை எப்படி நீங்க சந்திச்சீங்க?" விடாப்பிடியாய் கேட்டாள் கலா.

காமேஷ், "ரொம்ப ஆச்சர்யமா இருக்கு கலா.. நான் சந்தித்த அதே பெரியவரை நீ தா எனக்கு முன்னாலேயே சந்திச்சிருக்க.. ஆனா அப்போ, நீ யாரோ.. நான் யாரோ.. இப்போ பாரு.. ரெண்டு பேரும் ஒன்னா போயி சந்திச்சிருக்கோம்.." என்று புலகாங்கிதமாகி உணர்ச்சிவசப்பட்டான் காமேஷ்.

கார் இப்போது கோவைபுதூரில் உள்ள இன்பாண்ட் ஜீசஸ் சர்ச் முன்னர் நிறுத்தி விட்டு, காமேஷ், "கலா.. இங்கு இருக்கும் ஐயப்பன் கோயிலும் நாகப்பிள்ளையார் கோயிலும் இன்பாண்ட் ஜீசசு சர்ச்சும் ரொம்ப பிரபலமாமே. அங்கு போயிட்டு பின்பு வீட்டுக்கு போவோம் டா." என்றவாறே கலாவுடன் இறங்கி நடக்கலானான்.

சற்று தூரம் காலாற நடந்த படியே பேசிக் கொண்டு சென்றனர். சிறிது தூரத்தில் ஐயப்பன் கோயில் இருந்தது.

கோயிலுக்குள் சென்று வழிபட்டு, சந்தனம் வைத்துவிட்டு பின்பு சிறிது தூரம் நடந்து இன்பாண்ட் ஜீசஸ் சர்ச்சுக்குள் வந்தனர்.

அங்கு மெழுகுவர்த்தி ஏத்தி வழிபட்டுவிட்டு, வெளியே வந்து கார் எடுத்து நாகப்பிள்ளையார் கோயில் நோக்கி பயணப்பட்டனர்.

வழிபாடுகள் முடிந்து ஒரு வழியாய் காரில் ஏறி தங்களின் வீடு நோக்கி பயணமானார்கள். இப்போது மணி மாலை 5.45.

அதுவரை சஸ்பென்ஸ் பொறுத்துப் பார்த்த கலா.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல், திரும்ப அந்த டாப்பிக்கை ஆரம்பித்தாள்.

"ஏங்க.. நான் கேட்டதுக்கே இன்னும் பதிலைக் காணோமே.. அந்த பெரியவரை எங்கே எப்போ எப்படி சந்திச்சீங்க??" ஆர்வமாய் கேட்டாள் கலா.

"சொல்றேன்மா.. உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன்.." என்றவாறே... காரை மெதுவாக்கி, தன் ஆள்காட்டி விரல் கொண்டு கலாவின் முகத்தின் முன் வட்டவட்டமாய் சுற்றிச் சிரித்தான் காமேஷ்.

"என்னங்க பண்றீங்க... சின்ன பிள்ளை மாதிரி.." புரியாமல் கேட்டாள் கலா.

"ஃபேளேஷ் பேக் போகப் போறோம். அதான்.. சுழல் உருவாக்கினேன்." என்றான் கலகலச்சிரிப்புடன் காமேஷ்.

"போங்க.. உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான்" செல்லமாய் அவனது கையைத் தட்டிவிட்டபடி சிணுங்கினாள் கலா.

"நான் பி.எஸ்.ஜி கல்லூரியில் படிச்சிட்டிருந்த நேரத்துல.. பயங்கரமா பைக்கை ஸ்பீடா ஓட்டுவேன்.. அப்போ அதிகமா இருந்தது இளமைத் திமிர்.. எல்லாரும் புருவம் உயர்த்தி பார்க்க வைக்கும் ஒரு பிரபல கல்லூரியில் படிக்கறேன்கிறதுல கூடுதல் மிதப்பு எனக்கு இருந்துச்சு.. ஒரு தடவ அப்படித்தான்.. வேகமா பை ஓட்டிட்டு அவிநாசி ரோட்டில் ஹோப்ஸ் காலேஜ் தாண்டி போயிட்டு இருந்தேன். ஒரு திருப்பத்தில்
இந்த முதியவர் திடீரென்று சாலையின் குறுக்கே வர... அதிர்ச்சியில் ப்ரேக் போடுவதற்குள் அவர் மேல் எனது முன் வண்டிச்சக்கரம் கொஞ்சம் இடித்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமாயிட்டார். நானும் விழுந்து வண்டி என் மேல் விழந்து அடியில் மாட்டிக் கொண்டேன்.. ஹெல்மட் போட்டிருந்ததால் தலைக்கு ஒன்றும் ஆகலை.. அப்போ.. அந்த பெரியவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து ட்ரீட்மெண்ட் தந்தேன்.
அவருக்கு தலையில் அடிபட்டதால ஸ்கேனும் செய்தாங்க.. அப்போ தான் புரிஞ்சது.. அவருக்கு மூளையில் ஏற்கனவே ஒரு காயமானதால் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டிருக்கு என்பது.. அதனால்.. தன் பற்றிய எந்த விவரத்தையும் அவரால சொல்ல முடியலை.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை கலா... அப்படியே விட்டுப் போகவும் மனமில்லை.. அவருக்கு தான் படிச்ச படிப்பு... பெயர், அன்றாட நாம் நமக்கு செய்து கொள்ளும் வேலைகள், தாய்மொழி எதுவுமே மறக்கலை.. என் நண்பன் கிட்ட சொன்னப்ப.. அவன் வந்து பார்த்தான்.. பார்த்தவன்.. என் கையைப் பிடிச்சிட்டு அழாத குறையா நெகிழ்ந்துபோனான்..."


"ஐயோ.. என்னங்க... உங்களுக்கு ஏக்ஸ்டண்ட் ஆச்சா... அப்புறம்.. என்ன ஆச்சுங்க.. அவருக்கு பலத்த அடி இல்லையே? அந்த பெரியவர் யார்னு தெரிஞ்சிதா??" இடைமறித்தாள் கலா.

"ஆமாம் கலா...
ஆனா..அன்னிக்கப்புறம்.. நான் வண்டிய வேகமா ஓட்டுவதையே விட்டுட்டேன். அவரைப் பத்தி என் நண்பனிடம் கேட்டதில் அவன் சொன்னது அவன் தனது யூஜியை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிச்சிருந்தான். அங்கு ஆங்கிலமொழி பாடத்தின் முனைவராய் இருந்தவர் தான் இந்த பெரியவராம்.. அவரால் பலபேரின் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்திருக்காம்.. எந்த கட்டணமுமே வாங்காமல் இலவசமாய் பல ஏழை தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் உரையாடலைக் கற்றுக் கொடுத்து பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க உதவியவராம்.. இந்த அற்புதமான மனிதருக்கா இந்த நிலையென்று உடைஞ்சுட்டான்... அவனோட உதவியால... அவரைப் பத்தி தெரிஞ்ச விசயம் அடுத்தடுத்து அதிர்ச்சியையே தந்தது." என்று சொல்லி நிறுத்தினான் காமேஷ்.

"என்னங்க சொல்றீங்க.. இப்பேர் பட்ட பெரிய மனிதரா அவர்?? என்ன நடந்ததுங்க அவருக்கு..?" வருத்தமும் கலக்கமும் சேர்ந்துகொண்டது கலாவுக்கு.

"பல வருடம் முன்பு அவர் ஒரு சுற்றுலாவுக்காக நம்ம கோவை வந்திருக்கார்... அப்போ.. ஊட்டி செல்லும் வழியில் பெரிய ஏக்சிடண்ட் ஆனது. அதில் இவரோடு பயணம் செய்த மனைவி அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார். மகனும் இவரும் பெரிய காயங்களோடு உயிர்தப்பித்திருக்கின்றனர். இவருக்கு சிகிச்சை அளித்த பின் நார்மலாய் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார்.. பின்பு.. மகன் வீட்டில் இருக்காமல் திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்..
அவர் எங்கிருக்கிறார் என்று தேடிப் பார்த்து கிடைக்காமல் விட்டுவிட்டார் அவரது மகன். அப்புறம்.. என் நண்பர் மூலமா நான் அவரது மகனைத் தொடர்பு கொண்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா?"
என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ்.

"ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்களே.. அப்படித்தானே.." என்றாள் கலா மகிழ்ச்சியுடன்.

"அப்படித்தான் நானும் நினைச்சேன் கலா.. ஆனால்..இதோடு ஆறாவது முறையா தொலைந்து கிடைச்சிருக்கார் என்றும் அவர் அவசரமாய் குடும்பத்தோடு வேலை நிமித்தம் ஆஸ்ரேலியா போவதாகவும் இந்த நிலையில் அப்பாவை அவரால் பார்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லிட்டாரு.. சில லட்சங்கள் பணம் அந்த பெரியவர் பேருல போடுவதாகவும் அதை வைத்து நல்ல முதியோர் இல்லத்திலேயே வைச்சிக்கோங்கன்னு சொல்லிட்டார்" என்று வருத்தமாய் சொன்னான் காமேஷ்.

"ச்சே.. இப்படியுமா இருப்பாங்க... பெத்தவங்கள கூட பார்க்காம... விட்டுட்டு அப்படியென்ன வாழப்போறாங்கன்னு தெரியலை.." ஆத்திரமானாள் கலா.

"ஆமா கலா.. இப்படியும் இருப்பாங்கன்னே எனக்கு அப்போ தான் புரிஞ்சது.. இதுல எனக்கு ஒரே ஆறுதல்.. அந்த பெரியவருக்கு தன் குடும்பம் பத்தி நினைவே இல்லை.. அதனால் இந்த சம்பவங்கள் அவரது நிம்மதிய பாதிக்கல.. இன்னிக்கி வரைக்கும் இந்த உண்மையை நான் அவர் கிட்ட சொல்லவே இல்ல அன்னிக்கிலிருந்து அவரை இந்த அன்பு இல்லத்தில் சேர்ந்து பத்திரமா பார்த்துட்டு வருகிறேன். சின்ன வயசிலயே அப்பாவையும் அம்மாவையும் இழந்த எனக்கு கடவுள் கொடுத்த
"காட் ஃபாதர்"-ஆ இவரை நினைக்கிறேன்"
என்றான் காமேஷ்.

இத்தனையையும் பொறுமையாய்க் கேட்ட கலா.. ஒரு முடிவுக்கு வந்தாளாய் பேசலானாள்.

"உண்மையிலேயே நான் ரொம்ப கொடுத்து வச்சவங்க... இத்தனை அன்பான மனிதநேயம் மிக்க ஒருத்தர் எனக்கு கிடைச்சது போன ஜென்மத்து புண்ணியம் தான்.. நான் ஒரு யோசனை வச்சிருக்கேன்.. சொல்லட்டுமாடா என் கருத்த மச்சான்....!!" என்று சீரியஸா பேசுகையிலும் நகைச்சுவை காட்டினாள் கலா.

"ஏய்..ஏய்.. என்ன சொன்ன... டா...வா... கருத்த மச்சானா,.... நான் என்ன கருப்பா.. அப்போ.. நீ என்னோட கருவாச்சி.. டீ கருவாச்சி..." செல்ல சீண்டல் களைகட்டியது.

"சரி சரி.. எல்லாம் இருக்கட்டும்... ஏதோ சொல்லனும்னியே சொல்லு கலா" என்றான் காமேஷ்.

"உங்களோட ஃகாட் பாதரை நம்ம வீட்டிலேயே வைத்து பூஜித்தால் என்ன?" என்றாள் கலா.

"வாவ்... எப்படி கலா..நான் மனசுல நினைச்சது கேட்டது உனக்கு...??!! இதை உன்னிடம் எப்படி சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்றான் காமேஷ்.

"எனக்கு தெரியுங்க உங்க மனசை.. அதான் இந்த முடிவெடுத்தேன். ஆனால்.. ஒரு விசயம்.. ரத்னவேல் ஐயாவுக்கு நம்மோடு வருவதில் பூரண சந்தோசமும் நம்ம கூட வர சம்மதமும் சொன்னா தான் இது நிஜமாக்கனும்.. மயிலை வற்புறுத்தி ஆட வைக்கக் கூடாதுங்க.." என்றாள் தீர்மானமாய் கலா.

"ரொம்ப சரிமா.. நாளைக்கு சாயிந்திரமே போயி அவரின் சம்மதத்தை கேட்டுட்டு வந்துடறேன்.." என்றான் காமேஷ் உற்சாகமாக.

கார் உக்கடத்தை நெருங்கிய வேளையில்,
உக்கடம் குளத்தின் ஜில்லென்ற தென்றல் காற்றும்... அந்திவானத்தை தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியில் ஜொலிப்புக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த குளத்து நீரும் இவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டது.

"யார் யார் சிவம்... நீ நான் சிவம்..
வாழ்வே தவம்... அன்பே சிவம்..."


-என்ற பாடல் காரினுள் காற்றில் ஜதிசொல்லி அவர்களின் இதயத்தில் நுரையீரல் வழி சென்றது.

நாளைய அந்திவானத்தில் மேற்கில் உதிக்கும் ரத்னமாய் சூரியன் மின்னக் காத்திருந்தது ஃகாட் பாதர் வருகைக்காக..!

(முற்றும் - சுபம்)
__________________
~பூமகள்.

பருவநட்சத்திரங்கள்...! - பாகம் 3


(ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.)

அந்த ஒருவர் 70 வயதுடைய ஒரு முதியவர். 70 வயது என்று சொல்ல முடியாத அளவு 60 வயது போல் இருந்தது அவரது உடலமைப்பு.

சிலையாய் நின்ற கலாவின் கண்களில் வட்ட வட்டமாய் சுழலும் அந்த கால திரைப்பட பாணியில் ஒரு சுழல் வந்து 10 வருடம் பின்னோக்கி பழைய நினைவுகளை தோண்டி எடுக்கத் துவங்கியிருந்தது.

அந்த பெரியவரின் முகம் மறக்கவே முடியாமல் இன்னும் கலாவின் நினைவில் அப்படியே இருந்தது.

கோவையின் முக்கிய நகர்புற சாலையின் ஓரத்தில் வீற்றிருந்தது அந்த "ப்ளாக் மாரியம்மன் கோயில்". அதன் பிரகாரத்தின் வெளிப்புறத்தில் ஒரு ஆலமரம்.

குயில்களும் குருவிகளும் கோயிலின் மணியும் எழுப்பும் சத்தத்தினூடே காலை பிராத்தனை கூட்டத்தின் சத்தமும் அருகிருந்து வரும் படி அமைந்த ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி.

அதில் கலா, ரெட்டை ஜடை பின்னலில் மயிலாய் படித்த நடுநிலை வகுப்புக் காலம்.

பள்ளி விட்டு வரும் வழியில் எப்போதும் கலா அந்த கோயிலில் வழியே போவது தான் வழமை.

அன்று அவ்வாறே செல்கையில், அந்த ஆலமரம் அருகே ஒரே சிறார் கூட்டம்.

வேடிக்கை பார்க்கும் ஆவலில் கலாவும் கூட்டத்தில் ஐக்கியமாகிறாள்.

ஒரு முதியவர், அழுக்கேறிய சட்டை, பேண்ட், அழுக்கான கோட், பல நாட்கள் குளியலையே கண்டிராத மேனி, ஒடுக்குழுந்த கண்கள், நரைத்த குறுந்தாடி சகிதமாக நின்றிருந்தார். அவரைச் சுற்றித் தான் சிறார் கூட்டம்.

கலாவுக்கு சிறார்களின் கூட்டத்தின் காரணம் இன்னமும் விளங்கவில்லை.

சலசலப்பின் உச்சத்திலிருந்த சத்தங்களுக்கு நடுவே ஒரு சிறுவனின் குரல்...!

"தாத்தா, என் பெயரை ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்.." என்று கூறி தன் பெயரை 'சந்தோஷ்' என்றான்.

என்ன ஆச்சர்யம் அந்த முதியவர் கண்களில் ஒரு அறிவு ஒளிப் பிரகாசிக்க கச்சிதமாக பெயரின் ஆங்கில ஸ்பெல்லிங்கை எழுத்து விடாமல் சொன்னார்.

உடனே, அடுத்த சிறுவன் இதே போல் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தை சொல்லி ஸ்பெல்லிங் சொல்லச் சொன்னான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கலாவுக்கு ஆச்சர்யத்தில் புருவம் உயர்ந்தது.

கண்டிப்பா ஒரு நன்கு படித்த முதியவர் தான் இவர்.. காலத்தின் கோலம் இவரை இப்படி ஆக்கியிருக்கலாம் என்று மனவேதனை கொண்டு
சிறுமியான தன்னால் உதவ முடியாத நிலை கண்டு தவித்தாள்.

பிரசாதமாக கிடைக்கும் உணவும், அப்பப்போ அண்டை வீட்டார் மற்றும் சிறார்கள் கொடுக்கும் உணவும் அந்த முதியவருக்கு போதுமானதாக இருந்தது.

சிறிது காலமாய் பள்ளிக்குச் சென்று திரும்புகையில் மறக்காமல் பார்த்து அவருக்கு ஏதும் உண்ண தன்னிடம் உள்ளதை கொடுத்து வந்த கலா, ஒரு நாள் அவரை அந்த ஆலமரத்தினடியில் காணாமல் திகைத்தாள்.

விவரம் கேட்க யாருமில்லாததால், கலா செய்வதறியாது தவித்தாள்.

சிறுமியான கலா, சிறிது காலத்தில் அந்த நிகழ்வை மறந்தே விட்டாள்.

இப்போது அந்த முதியவரைத் தான் இந்த அன்பு இல்லத்தில் கண்டிருக்கிறாள்.

"என்ன கலா... அப்படியே நின்னுட்ட.... ஆப்பிளை அவரிடம் கொடுமா...!" என்றவாறே காமேஷ் அருகில் வந்தான்.

கலா பழைய நினைவுகளின் சங்கிலி தொடரில் சென்றவள் காமேஷின் குரல் கேட்டு நிஜத்துக்கு திரும்ப வந்தாள்.

"பை த வே.. நான் சொன்னேனே... ஒரு முக்கியமான ஒருவரை சந்திக்க போறோம்னு..! அவரு இவர் தான்.. பேரு ரத்னவேல். இவர் ஒரு ஆங்கில பேராசிரியர். ஃபொனட்டிக்ஸ்-ல் விசேசமா புலமை பெற்றவர்."
என்று சொல்லிவிட்டு அவரிடமும் ஆசி வாங்க முனைந்தனர்.

"மகராசனா இருப்பா..." என்று காமேஷைப் பார்த்தும் "மகராசியா, தீர்க்க சுமங்கலியா இரும்மா" என்று கலாவைப் பார்த்தும் வாழ்த்து சொன்னார் அந்த பெரியவர்.

"ஐய்யா... நல்லாயிருக்கீங்களா? மாத்திரை எல்லாம் நேர நேரத்துக்கு சாப்பிடறீங்களா?" என்று பவ்யமாய் கேட்டான் காமேஷ்.

"எனக்கென்ன தம்பி குறைச்சல்.. நான் நல்லாயிருக்கேன்.. மாத்திரை எல்லா இங்க சரியான நேரத்துக்கு கொடுக்கறாங்கபா.. நான் கரக்டா சாப்பிட்டுட்டு தான் வர்றேன்." என்று தள்ளாத வயதின் நடுக்கத்துடனே பதிலளித்தார் பெரியவர் ரத்னவேல்.

கலாவின் குழப்பமான முகம் புரிந்தாலும் வெளிக்காட்டாமல் காமேஷ் எல்லாருக்கும் உணவு பரிமாறுவதில் குறியாய் இருந்தான்.

எல்லாரும் சாப்பிட்டாயிற்று. இப்போது நேரம் காலைக் 11-ஐ எட்டியிருந்தது.

கலாவும் காமேஷும் இன்னும் சாப்பிடவேயில்லை என்பது அவர்களுக்கு அப்போது தான் வயிறு காட்டிக் கொடுக்கத் துவங்கியிருந்தது.

அன்பு இல்லத்தின் பொறுப்பாளரைச் சந்தித்து, காமேஷ் பேசலானான்.

"மேடம்.. இன்னிக்கு மதியத்துக்கும் இரவு டிப்பனுக்கும் அன்ன பூர்ணாவிலேயே சொல்லியிருக்கேன். டைமுக்கு கொண்டு வந்துடுவாங்க.. அதில் ஏதும் ப்ராப்ளம்னா எனக்கு போன் பண்ணிச் சொல்லுங்க.. நாங்க இப்ப கிளம்பறோம்" என்று சொல்லிமுடித்து பெரியோரைப் பார்க்கச் சென்றான் காமேஷ்.

எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.

(பயணம் தொடரும்)

__________________
~பூமகள்.

பருவநட்சத்திரங்கள்...! - பாகம் 2


கோயிலுக்குள் நுழைந்த கலா பயத்துடனே பிரகாரத்தைப் பார்த்தாள். இருபுறமும் ஆல மரத்தாலும் வேப்ப மரத்தாலும் சூழப்பட்டு கீழே இலைகளின் காய்ந்த சருகுகள் மண்டி மண்ணோடு மண்ணாக மட்க எத்தனித்துக் கிடந்தன. அரண்ட கலாவின் கண்களுக்கு சருகுகளும் அரவமாய் தெரிந்தன. மெல்ல திரும்பி பின்னால் பார்த்தாள் கலா. துரத்திய பாம்பு வாயிற்படியைத் தாண்டி நுழைந்து ஆக்ரோசமாய் சீறியபடி அவள் நோக்கிவந்து கொண்டிருந்தது.

கோயிலில் கற்ப கிரகம் பூட்டி யாருமில்லாமல் இருந்ததால்... கோயிலில் பின் பக்கம் நோக்கி அதிகரிக்கும் இதயத்துடிப்புடனே வேர்க்க விருவிருக்க ஓடத்துவங்கினாள் கலா. அங்கே எதிரில் அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலாவின் முன்னாலும் இரண்டு கரு நாகங்கள் நாக்கை துருத்தியபடி ஆவேசமாய் வர, பின்னாலும் துரத்திய கட்டுவிரியன் கிட்ட நெருங்க.... செய்வதறியாது....

கலா பயத்தின் உச்சத்திற்கே சென்று "வீல்" என்று கத்தியபடி பதறி கண்விழிக்கவும், "ட்ரிங்!!!!" என்ற அலரலுடன் அலாரம் அடித்து காலை 4 மணியை அறிவிக்கவும் சரியாய் இருந்தது.

அலாரத்தின் ஓசையை விட கலாவின் கூவல் தான் பெரிதாக விழுந்தது காமேஷின் காதில். திடுக்கிட்டு எழுந்தான் காமேஷ்.

பயமும் வியர்வையும் வழிய மலங்க மலங்க விழிக்கும் கலாவைப் பார்த்து, கெட்ட கனவு ஏதும் கண்டிருப்பாள் என்று ஊகித்து, அருகில் இருக்கும் சொம்பிலிருந்து தண்ணீர் எடுத்து டம்ளரில் ஊற்றி, "ஒன்னுமில்ல டா... கனவு கண்டிருப்பே.. இந்தா தண்ணிய குடி கலா!!"

"என்னங்க... பாம்பு வந்திச்சிங்க.. என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்திச்சிங்க...!" கனவின் தாக்கத்திலிருந்து முழுதும் விடுபடாமல் நடுங்கும் குரலில் சொன்னாள் கலா.

அவளை அப்படியே தோளில் சாய்த்து, ஆறுதலாய் தலை கோதி, "ஒன்னுமில்லைடா.. நேத்து நைட் டிஸ்கவரில பாம்பு பத்தின டாக்குமெண்ட்ரி பார்த்தோமே...!! அதான்..கனவில வந்திருக்கு...!! பயப்பட ஒன்னுமில்லை கலா. எல்லாம் பிரமை தான்.. அதான் இரவு நல்ல விசயங்களை பார்த்துட்டு தூங்கனும்னு சொல்வேனே அடிக்கடி... நீ தான் கேக்கவேமாட்ட..."

"சரிங்க.. இனி அப்படியே செய்யறேன்.." என்று கலா நடுக்கம் குறைந்து நார்மல் அடைந்தாள்.

எழுந்து கிளம்பி, கலா வெளிர் ஊதா நிற பட்டுப்புடவையிலும் காமேஷ் மெருன் கலர் சட்டை மற்றும் சந்தன கலர் பட்டு வேட்டியுமாக காலை 6 மணிக்கே இருவரும் முதலில் மருதமலைக்கு சென்றார்கள். அவர்கள் இருந்த வடவள்ளிக்கு மிக அருகில் இருந்தது மருதமலை முருகன் கோயில். கோவையின் விசேசமான சுற்றுலா தளங்களில் முதன்மையானது.

மருதமலையின் அழகிய வனப்பில் முருகனின் அருளை விசேச வழியில் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அங்குள்ள திட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டனர் கலாவும் காமேஷும்.

மலையின் அழகை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்த காமேஷின் மௌனத்தைக் கலைக்க முயன்றால் கலா. "என்னங்க...என்னங்க... இங்க பாருங்க... இந்த புடவை எனக்கு எப்படியிருக்கு? நீங்க நேத்து வாங்கி கொடுத்தது தான்.. ஆனால் ஒன்னுமே சொல்லாம இருக்கீங்களே??" செல்ல கோபத்தில் சிணுங்கினாள் கலா.

"அடடா... அதை சொல்லாம விட்டுட்டேனா?? என் கலாகுட்டி இந்த பட்டு புடவைல சும்மா தேவதை மாதிரி இருக்கே.. என் கண்ணே பட்டுடும்... வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போடனும்.." என்று காமேஷ் ஐஸாய் உருகினான்.

கலா, "போங்க... ரொம்ப ஓவரா தான் பொய் சொல்றீங்க...இன்னிக்கி...!" வெட்கப்பட்டு, சிவந்தது மேலும் கலாவின் ரோஸ் நிற கன்னங்கள்.

"இப்படி பேசி... கேட்கவந்ததையே மறக்க வச்சிட்டீங்களே?? சரி.... இப்பவே மணி 8.. எப்ப போயி அன்பு முதியோர் இல்லத்தை பார்த்து உணவு வழங்கறது??"

"ஒன்னும் பிரச்சனை இல்ல கலா... நான் நேத்தே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்...அன்னாபூர்ணாவிலிருந்து காலை டிபன், மதிய சாதம், இரவு டிபன் எல்லாம் ரெடியா டைமுக்கு அன்பு முதியோர் இல்லத்துக்கு போயிடும். நாம் அங்கு போயி சேருவதற்குள் அங்கு காலை உணவு ரெடியா இருக்கும். சரி.. 10 மணிக்குள்ள வரேன்னு சொல்லியிருக்கேன். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் கலா.. கிளம்புவோமா??"

"சரிங்க...கிளம்புவோம்..!" எழுந்து கையில் கொண்டு வந்த டிஜிடல் கேமிராவில் அரசமரத்து பிள்ளையாரின் அருகில் நின்று இருவரும் வேறு ஒருவரை புகைப்படம் எடுக்கச் சொல்லி கிளம்பினர்.

படியிறங்கிய படியே கலா, "இப்ப தாங்க.. மனசு நிம்மதியா இருக்கு.. நம்ம கல்யாண நாளும் அதுவுமா... அரவத்தை கனவில் பார்த்து ரொம்பவே அப்சட் ஆயிட்டேன். இங்கு முருகரிடம் எல்லாம் சொல்லி முறையிட்டு மனசு நிம்மதியா இருக்கு."

"நீ மனச போட்டு வீணா குழப்பிக்கற..! நான் தான் குத்துக் கல்லு மாதிரி கூடவே இருக்கேனே?? என்னை நினைக்காம கனவில வந்ததையே நினைக்கிறயே...?? உண்மைய சொல்லுடா.. கனவுல வந்தது நடிகர் ப்ரித்விராஜ் தானே??" என்று சீண்டி வம்புக்கிழுத்தான் காமேஷ்.

"ச்சீ போங்க...கனவில ப்ரித்வி வந்தா.... பயந்தா எழுவேன்.." என்று கண்ணடித்தாள் கலா....!

"அடிப்பாவி.... இரு இரு உன்னை வீட்டில் போயி கவனிச்சிக்கிறேன்" என்று செல்ல கோபத்தோடு கீழே இறங்கியபடி இருந்தான் காமேஷ்.

காரில் ஏறி நேரே "அன்பு இல்லம்" நோக்கி பயணித்தனர் கலா-காமேஷ் தம்பதிகள்.

கார் சக்தி ரோட்டை அடைந்தது. மிகுந்த ஜன நெருக்கடி அதிகம் உள்ள கணபதியின் பிரதான பேருந்து நிறுத்தத்தை தாண்டி மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

சிவானந்த மில்லுக்கு அடுத்து சில மைல் தொலைவில் இருந்தது "அன்பு முதியோர் இல்லம்".

வாசலில் காரை நிறுத்தி, இருவரும் இறங்கி உள்ளே சென்றனர். அன்புடன், அங்கிருக்கும் கதவுக்காவலர் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். உள்ளே நுழைந்து வலது புறத்தில் இருக்கும் அலுவலக அறை நோக்கி நடந்தனர்.

"வாங்க வாங்க.. உட்காருங்க!! உங்களுக்கு தான் போன் செய்யலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். நிறைய பேரு... வேலை பிசில இங்கு சொன்னதையே மறந்திடுவாங்க.. அவங்களுக்கு ரிமைன் பண்ணுவது வழக்கம். பரவாயில்லை.. நியாபகமா வந்திட்டீங்க..!! ரொம்ப சந்தோசம்" என்று கூறினார் அன்பு இல்லத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்மணி.

"காலையில் டிபன் வந்திடுச்சாங்க மேடம்??" இது காமேஷ்.

"எல்லாம் கொஞ்ச முன்னாடி தான் வந்துதுங்க.. நீங்க வெயிட் பண்ணுங்க... பெரியவங்க... குளிச்சி பிரேயர் பண்ணிட்டு இருக்காங்க.. இன்னும் 10 நிமிசத்தில் நீங்களே உங்க கையால அவங்களுக்கு உணவு பரிமாறலாம். நீங்க விரும்பினா..!" என்று சொல்லி முடித்து எழுந்து முதியோர் இருக்கும் பிரேயர் ஹாலுக்குச் சென்றாள்.

கலா சுற்றியிருக்கும் சுவர்களில் சிரிக்கும் முதியவர்களின் குரூப் புகைப்படங்களைப் பார்த்த வண்ணமே இருந்தவள், ஒரு படத்தைப் பார்த்ததும், "என்னங்க...!! இங்க பாருங்க... நம்ம அப்துல் கலாம் வந்து இங்கு அடிக்கல் நாட்டி கட்டிடம் எழுப்ப உதவியிருக்கார்" என்று சொல்லி வியந்தாள் கலா.
காமேஷ் பார்த்து, "ஆமாம் கலா.. எனக்கு இந்த இல்லம் பல வருடமாய் தெரியும். என் நண்பர் தான் இந்த இல்லத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒருவர்." என்று சொல்லி காமேஷ் முடிக்கவும், அந்த பெண்மணி அவர்களை ப்ரேயர் ஹாலுக்கு அழைக்கவும் சரியாய் இருந்தது.

இவர்கள் சென்றதும், அந்த பெண்மணி எல்லார் முன்னிலையிலும் மைக்கில் இவர்களைப் பற்றியும், இன்று இவர்கள் தான் முதியவர்களுக்கு உணவு வழங்கப்போவதையும் சொல்லி இவர்களின் சுகமான நீண்ட வாழ்வுக்கு பிராத்தனை செய்யச் சொன்னார். அனைவரும் கண்களில் கண்ணீர் மல்க இறைவனை வேண்டி அவர்களுக்கான பாடலை பாடுவதைப் பார்த்து கலா - காமேஷ் கண்களிலிருந்து கண்ணீரும் வந்து எட்டிப் பார்த்துச் சென்றது.

ஒரு மடைதிறந்து புது வெள்ளம் பாயும் காய்ந்த பூமி போல, மனமெல்லாம் புது மின்சாரம் பாய்ந்தது இருவருக்கும்.. இதுவரை புரிந்திராத ஒரு உணர்வு அவர்களை ஆட்கொண்டு கண்கள் கலங்கி அமர்ந்திருந்தனர் முன்னால் இருக்கும் பெரியவர்களைப் பார்த்த படியே..!!

30 முதிய பாட்டிகளும், 35 முதிய பெரியவர்களும் நாற்காலிகளில் அமர்ந்து கண்கள் மூடி கைகள் கூப்பி பிராத்தனை செய்யும் காட்சி மனத்தை உருக வைத்தது.

பிராத்தனை முடிந்ததும், காமேஷை பேச அழைத்தார் இல்லத்தின் பொறுப்பாளரான அந்த பெண்மணி. உள்ளம் முழுக்க சுனாமி மென்மையாய் தாக்க, கண்களில் மழைச்சாரல் வர.. எப்படி வார்த்தை வரும் நீந்தி அதில்?? வார்த்தை வர இயலாமல்... பேசவில்லை என்று தலையசைத்து சொல்லி எழுந்து காலை உணவு பரிமாற விழைந்தார்கள்.

முதியவர்களுக்கு ஆப்பிள் பழத்தைத் துண்டுகளாக்கி, அதையும் மிச்சரையும் கலாவும் காமேஷும் வரிசையாய் கொடுத்த படியே வந்தனர்.

உணவு பரிமாற ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் ஏற்கனவே..! மிச்சரையும் பழங்கள் கொடுத்து, இருவரும் ஒவ்வொரு முதியவரிடத்தும் ஆசி வாங்கினர்.

வரிசையாய் கொடுத்துவருகையில், ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.

(தொடரும்)
__________________
~பூமகள்.

Monday, December 3, 2007

பருவநட்சத்திரங்கள்...! - பாகம் 1 - தொடர்கதை

'கலா குட்டி...!! எங்கடா இருக்கே??' என்று தன் மனைவியை கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் காமேஷ்.

அடுப்படியில் தம் பிரிய கணவருக்காக கேசரி செய்து இறக்கிய கலா, 'இதோ வர்றேங்க..!!' என்று கூறிய வண்ணமே முகப்பு அறைக்கு வந்து நின்றாள்.

'இந்தா..!! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாரு டா...?!!'

'எதுக்குங்க இப்ப பட்டுபுடவை எல்லாம்? அதான் வீட்ல நிறைய இருக்கே! நாம ஏற்கனவே முடிவு செஞ்சதை மறந்துட்டீங்களா?'

'என்ன முடிவு???' என்று புருவத்தை உயர்த்தி யோசிக்கலானான் காமேஷ்.

'ரொம்ப யோசிக்காதீங்க...அப்புறம்... தலைவலிக்குதுடா கலான்னு... டீ போட்டு தான்னு இரவு எந்திரிச்சி உக்காந்துட்டு தொல்லை பண்ணுவீங்க.. நானே சொல்றேன்.
நம்ம முதல் வெட்டிங்க் டே அன்னிக்கி அனாதை இல்லதில் இருக்கும் முதியோர்களைக் கண்டு ஒரு நாள் முழுக்க அவங்களோட இருந்து உணவு கொடுத்து ஆசி வாங்கிட்டு வரனும்னு முடிவு பண்ணினோமே?? மறந்துபோச்சா??'


'ஓ...... அதுவா?? அதை எப்படிடா மறப்பேன்...! நல்லா ஞாபகம் இருக்கு. இருந்தாலும் உனக்கு ஏதாவது ஆசையா வாங்கி கொடுக்கனும்னு தோனிச்சி... அதான் வாங்கிட்டு வந்திட்டேன்.
உனக்கு புடவை பிடிச்சிருக்கா??'


வெளிர் ஊதா நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்து பட்டுப்புடவை நேர்த்தியாய் ஜொலித்தது. பிரித்துப் பார்த்த வண்ணமே கலா, 'ரொம்ப பிடிச்ச்சிருக்குங்க...!! உங்கள மாதிரியே இருக்கு...!!' சொல்லிவிட்டு வெட்கப்பட்டு சமையல் அறை நோக்கி சட்டென்று ஓடிச் சென்றாள்.

'கலா...கலா....!!' என்று கூப்பிட்டவாறே காமேஷ் பின்னாலேயே ஓடினான்.

'கலா! நாளைக்கு நம்மலோட ஃபஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரி. அதனால ஆபிஸ்ல லீவ் போட்டிருக்கேன் டா... நீயும் நானும் நேர கோயிலுக்கு போயிட்டு அப்படியே "அன்பு முதியோர் இல்லம்" போகலாம்! அங்கு ஒரு முக்கியமான ஒருவரை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்.'

'என்னங்க...!! யாருங்க அது??' அழகான பெரிய ப்ரவுன் நிற கண்கள் விரிய ஆவலாய் கேட்டாள் கலா.

'பொறுடா.. கலா..! நாளைக்கு தான் பார்க்க போறியே... அப்போ சொல்றேன்..' சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ் நகைத்தபடி..!!

'சரி.... ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க! உங்களுக்குப் பிடிச்ச கேசரி செய்து வைத்திருக்கிறேன்.. சூடா சாப்பிடலாம்..! சீக்கிரம் வாங்க..!!'

ஆதவன் மெதுவாக நீல நிற கடலின் பின்னால் ஒளியத்துவங்கினான்.. நட்சத்திரக்கூட்டம் ஆதவனைத் தேடி... அங்கும் இங்கும் கண்கள் சிமிட்டி தேடிப் பார்க்க துவங்கியிருந்தன..

இரவு உணவைப் பரிமாறி, அடுப்படி வேலை முடித்து கலா கண்ணயர 10.30 மணி ஆனது.

காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்ப, அதிகாலை 4 மணிக்கே அலாரம் வைத்து உறங்கியிருந்தான் காமேஷ்.

விடியக்காலை... வேகமாக எழுந்து பல் துலக்கி, வாசல் பெருக்கி கோலம் போட வெளிப்பட்டால் கலா. அவர்கள் இருக்கும் வீடு சிட்டியை விட்டு கொஞ்சம் உள்ளே...அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி.

அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த நகரத்தின் ஆக்கிரமிப்புகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரத்தின் மிச்சப்பகுதி.

ஆங்காங்கே தெரியும்.... வீடுகள்..!!

வாசலுக்கு முகம் கழுவி, கோலம் போட கோலப்பொடியை துலாவியபடியே சின்ன விரல்களால் வானத்து நட்சத்திரங்களை தரையில் தற்காலிகமாக இறக்கிவைத்தவண்ணம் இருந்தாள்.

அப்போது, அவள் அருகில் மிகக் கொடிய நாகம் ஒன்று மிக அருகில் வந்து காலருகே நின்றது. புள்ளி வைத்துவிட்டு திரும்பிய அவள், அதனைக் கண்டு அஞ்சி திரும்பி ஓடத் துவங்கினாள்.

வீட்டிற்குள் செல்ல இயலாமல் கதவருகே அது இருந்ததால்...வெளியில் ஓடுவது தவிர வேறு வழியே இல்லை கலாவிற்கு.... பின்னாலேயே பாம்பும் துரத்தியது. அதிகாலை நேரமாதலால் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.

கலா கலங்கும் நெஞ்சுடன், ஓடிக்கொண்டே இருந்தாள்... ஒரு ஒற்றையடிப்பாதையில் உயிரைப் பணயம் வைத்து...தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை ஒரு கோயிலில் போய் முடிந்தது. ஒரு பழைய கோபுத்தை பார்த்தாள் கலா..
கலா.... கோயிலின் முகப்பினை நெருங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே, பிரகதீஸ்வரர் உருவில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

பின்னால் பாம்பும் விடாமல் துரத்தி வருகிறது. செய்வதறியாது கோயிலுக்குள் நுழைகிறாள் கலா...!!

(ஓட்டம் தொடரும்)

________________
-பூமகள்.

Sunday, December 2, 2007

ஒரு மாலை இளவெயில் நேரம்..!

ஒரு மாலை இளவெயில் நேரம்..!"ச்சே....! மணி ஆறு ஆச்சு... ஒரு சேர் ஆட்டோ கூட காணோமே..! இத்தன நேரம் காத்திருக்க வச்சி.. ரெண்டு நாள் கழிச்சா வரச் சொல்லுவாங்க.. இத மதியமே ஃபஸ்ட் ரவுண்ட் ஆன்லைன் டெஸ்ட் முடிஞ்சதுமே சொல்லியிருக்கலாமே..!" என்று மனசுக்குள் புலம்பியபடியே ஃபைலோடு மைலாப்பூரின் ஒரு எம்.என்.சி நிறுவனத்துக்கு இண்டர்வியூவுக்காக சென்று விட்டு வடபழனியில் காத்திருந்தாள் சந்தியா.

மெல்ல சூரியன் கடல் நோக்கி மேற்கில் பயணப்பட்டிருந்தது. வெள்ளை நிற சுடிதாரும், வையலட் நிற ஃபைலும், களையான முகமும் கொண்டு சந்தியா ஒரு குட்டி தேவதைப் போலத்தான் நின்றிருந்தாள். மெல்லிய தூரலோடு சில்லென்ற காற்றும் வீசத் துவங்கியிருந்தது.

நேரம் மாலை 6.30 ஆகியது. ஆட்டோ பிடிக்கலாம் என்றால், ஆட்டோவையும் காணோம். வரும் ஷேர் ஆட்டோக்களும் வேறு ஊரின் பெயர் போட்டிருந்தது.

ஒரு ஷேர் ஆட்டோ, "கோல்டன் ஃப்ளாட்ஸ்/அண்ணாநகர்" என்று பெயர் பலகை இட்டு வந்துகொண்டிருந்தது. சந்தியா கையசைக்க, அங்கு வந்து நின்றது.

ஷேர் ஆட்டோவினுள் ஓட்டுநர் தவிர யாருமே இல்லை. சந்தியா சற்று யோசித்து பின்வாங்கினாள், பின் இன்னும் நேரமானால் ரொம்ப சிரமமாயிடுமே என்று எண்ணி, "திருமங்கலம் போகுமாங்க??" என்று கேட்டாள்.

ஓட்டுநர், போகும் என்பது போல் தலையசைத்து ஏறச் சொல்லி சைகை காட்டினார்.

ஏறி, மெல்லிய தூரலில் நனைந்த தனது கூந்தலை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே பார்த்த வண்ணம் வந்தாள்.

அடுத்த நிறுத்தத்தில், ஒரு கால் நூற்றாண்டு மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் ஏறினார். அவர் வலது ஓரத்தில் உட்கார, சந்தியா இடது ஓரத்தில் கம்பியைப் பிடித்து ஓட்டி அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம், இன்னொருவரும் ஏற, கிட்டத்தட்ட, சந்தியா ஓரத்தில் கம்பியோடு ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

மாலை இருட்டத்துவங்கியது.

ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம், "ஏங்க, திருமங்கலம் வந்தா சொல்லுங்க.." என்று சொன்னாள் சந்தியா. ஷேர் ஆட்டோவின் ஓட்டுனர், புன்னகைத்தபடியே சரி என்று தலையாட்டினான்.

வேறு திசை நோக்கி ஆட்டோ பயணப்பட்டிருந்தது. சந்தியாவின் அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓரப்பார்வையில் இவளை நோட்டமிட்டதை சந்தியா கவனித்தாள். சட்டென்று துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவர்கள், நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரத்தில், எந்த நிறுத்தத்திலும் நில்லாமல், ஷேர் ஆட்டோ வேறு ஒரு குறுகிய வழியில் போய்க்கொண்டிருந்தது. சந்தியாவுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது. பயத்தோடு, "ஏங்க, எந்த வழியா போறீங்க? மெயின்ரோடு மாதிரி தெரியலையே" என்று தைரியத்தை வரவழைத்து
கேட்டாள் சந்தியா.

"இது குறுக்கு வழி மா... மெயின் ரோட்டில் ட்ராப்கினால இந்த வழியா போகச் சொல்லியிருக்காங்க" என்று சொன்னார் ஓட்டுநர். அவரது பதில் சமாளிப்பு என்று சந்தியாவுக்கு மெதுவாகத்தான் விளங்கிற்று.

யாருமற்ற ஒரு காலி இடத்தின் அருகில் நின்றது ஷேர் ஆட்டோ.

சந்தியா, திடுக்கிட்டு, "ஏங்க.. என்ன ஆச்சு? எங்கே இருக்கோம்??" என்று பதட்டமாகி கேட்டாள். நடத்துனர், பதில் சொல்லாமல், திரும்பி... வில்லத்தனமாய் சிரித்தான். கூட அது வரை அமைதியாய் வந்த ஆண்களில் ஒருவன் சந்தியாவின் கையைப் பிடிக்க, அவள் கத்தும் முன், இன்னொருவன் அவள் வாயில் கை வைத்து, சத்தமெழுப்பா வண்ணம் அழுத்த, ஓட்டுனர், இறங்கி பின்னே ஏற... சந்தியா திமிறி விட்டு வெளியே வர முயல அந்த மூவரின் பலத்திற்கு நடுவில் எதுவும் முடியாமல் பூனைக்குட்டி போல் நடுநடுங்கி போய்விட்டாள்.

சந்தியா கத்த முயன்று, தோற்று, வாயின் வைத்த கையின் விரலை பலம் கொண்ட மட்டும் கடிக்க, அவன், "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......ஆ.....!" என்று கத்திக்கொண்டு கையை அகற்ற, அது தான் தருணமென்று,
சந்தியா,
"ஆ.........! காப்பாத்துங்க....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!" என்று கத்தினாள்.
..
...
...
...
...
...
...
...
...

"ஏம்மா.. ஏம்மா... உன்ன தாமா... திருமங்கலம்னு தானே கேட்டீங்க??" என்று சத்தமாய் கேட்டார் ஓட்டுநர்.
அதுவரை, நினைத்தது எல்லாம் பிரமை என்று உணர்ந்து, சட்டென்று நினைவு வந்தவளாய், சந்தியா, "ஆமாங்க!" என்று சொன்னாள்.

"இது அண்ணா நகர் போகுதுமா.. நீங்க இங்கயே இறங்கிக்கோங்க. திருமங்கலம் திரும்பி நடந்து ஒரு வளைவு திரும்பினா போதும்." என்று சொன்னார் ஓட்டுநர்.

சந்தியா, பத்து ரூபாய் நோட்டை நீட்ட, ஓட்டுனர், ஐந்து ரூபாய் காயினை எடுத்துக் கொடுத்தார். சந்தியா,"ரொம்ப நன்றிங்க..!" என்று சொல்லிப் புன்னகைத்து விலகினாள்.

அவளது, நன்றி நவிழலும், புன்னகைக்கும் அர்த்தம் விளங்காமல் ஷேர் ஆட்டோவை இயக்க ஆரம்பித்தார் ஓட்டுநர்.

மெல்ல, இருள் படர, சந்தியாவின் இதயத்தில் நிம்மதி பரவத் துவங்கியிருந்தது.
__________________
~பூமகள்.