RSS

Wednesday, March 25, 2009

செவத்தம்மா....!

செவத்தம்மா

கலைத்துப் போடப்பட்ட கீரைக் குவியல்களைக் கட்டுகளாக்கி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள் செவத்தம்மா...

வயது கண்டுபிடிக்க இயலாதபடி உழைப்பின் வனப்பு அவள் உடலெங்கும் மேவியிருந்தது...
அதிகாலையில் மார்கெட் சென்று அன்றன்று வந்த காய்கறிகளில் எவை மலிவோ அவற்றை ஒரு கூடையில் வாங்கி மாலைக்குள் விற்று காசு பார்ப்பது செவத்தம்மாவின் அன்றாடப் பிழைப்பு..

இன்றும் அப்படித்தான்.. இருக்கும் சொற்பக் காசுக்கு கீரை மட்டுமே கிட்டியது.. அகத்திக் கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை, அரைக் கீரை, சிவப்புக் கீரை, சுக்குட்டி(மணத்தக்காளி) கீரை, நினைவாற்றல் கொடுக்கும் வல்லாரைக் கீரை, புதினா இப்படி கட்டுகளை அடுக்கி தலையில் சும்மாடு இட்டு கூடையை மேலே தூக்கி தாமே வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்..

"கஞ்சி காய்ச்சி அங்கன வைச்சிருக்கேன்... உச்சி வெயில் வாரக்குள்ள நான் போயி கீரையை வித்துட்டு வந்துடறேன்.. தண்ணி எதுனா வேணும்னா உன் கை பக்கத்துல சொம்பு இருக்கு.." - என்று வீட்டிலிருக்கும் தன் கணவன் காளையனுக்குச் சொல்லிவிட்டு வியாபாரத்துக்கு தயாரானாள் செவத்தம்மா..

"ஏ.... கீரை வாங்கலையோ கீர....... அரைக்கீரை.... வல்லாரைக் கீஈஈஈரை......... வெந்தயக் கீரை... அகத்திக் கீரைஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ........" கூவியபடியே சென்று கொண்டிருந்தாள் செவத்தம்மா...


பக்கத்து மூன்று நான்கு தெருக்கள் சுத்தினா தான் பாதிக் கூடையாவது காலியாகும்... இன்னும் எம்புட்டு தூரம் தான் நடந்துட்டே இருக்கறது... என்று வழிந்த வேர்வையைத் துடைத்தபடியே தளர்ந்த நடையில் நிழல் தேட ஆரம்பித்தாள் செவத்தம்மா...


தூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் நொங்கு விற்பவர் நிற்க.... அந்த திசை நோக்கி செல்லலானாள்..

கூடையை இறக்கி.. ஆலமர வேர்களின் மேல் அமர்ந்து கொண்டாள்.. நொங்கு விற்பவரிடம் திரும்பி.. "ஐஞ்சு ரூபாய்க்கு நொங்கு தாங்கண்ணே" என்றாள்..

ஆறு நொங்குகள் தோண்டிக் கொடுக்க... மூன்றை உண்டுவிட்டு.. மூன்றை தன் கூடையிலிருக்கும் பாலிதீன் பையில் சேமித்தாள்... தாகமெடுக்கவே.. மூன்று ரூபாய்க்கு தெளுவு வாங்கிக் குடித்துவிட்டு.. மறுபடி கூடையை எடுத்து தலையில் வைத்து நடக்க ஆரம்பித்தாள்..

பின்னாலிருந்து யாரோ தன்னை கூப்பிடுவது போல் தோன்றவே.. திரும்பிப் பார்த்தாள்..

தூரத்திலிருந்து ஒரு உருவம்..

"ஏலே செவப்பி.. செவப்பி.. " என்ற படி ஓடி வந்து கொண்டிருந்தது..

அருகில் வந்ததும்.அடையாளம் கண்டு கொண்டாள் செவத்தம்மா...

"நீ... நீங்க.... தங்கவேலு தானே.." என்று அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டாள் செவத்தம்மா...

"ஆமா செவப்பி... நானே தான்.. என்னை மறக்காம நியாபகம் வைச்சிருக்கியே அது போதும் புள்ள.... எப்படி இருக்கே... ஏன் இப்படி ஆயிட்டே" என்றான் தங்கவேலு..

"எப்படி ஆயிட்டேன்... நான் நல்லாத்தானே இருக்கேன்" என்று கலங்காமல் பதிலளித்தாள் செவத்தம்மா..

"உன்னை இப்படி பார்க்க மனசு கேக்கல புள்ள... என் கூட வந்துடு.... நான் உன்ன ராணி மாறி பார்த்துக்கறேன்... உன்னை எப்படி எல்லாம் தாங்கனும்னு கனவு கண்டேன்.. இப்படி இருக்கியே புள்ள..." என்றான் தங்கவேலு..

பதிலேதும் பேசாமல் புன் சிரிப்பொன்றை உதிர்த்தாள் செவத்தம்மா...

"செவப்பி.... உன்னை பிரிஞ்சி போனேனே தவிர... நீ இல்லாத வாழ்க்கைய நான் நினைச்சி கூட பார்க்கல புள்ள... என் கூட வந்துடு.. போதும் நீ பட்ட கஷ்டமெல்லாம்..."

"என் மாமா மவன் என்ன கண்ணாலம் கட்டிக்கிற வரைக்கும் கண்ண தொறந்துட்டு பார்த்துட்டு தானே இருந்தே.. அப்போ வந்து தடுத்து என்னை கண்ணாலம் கட்டியிருக்கலாமில்ல.. அப்ப இல்லாத வீரம் இப்போ எங்கிருந்து வந்துச்சு?" கொஞ்சம் கோபத்தோடே பேசலானாள் செவத்தம்மா..

"அப்போ இருந்த நிலமைல.. என்னால ஊரை எதிர்த்து.. உன் மாமா மவன் காளையனை எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியல செவப்பி... என்னை மன்னிச்சிரு.. இப்போ இம்புட்டு கஸ்டப்பட்டுட்டு இருக்கற உன்னைப் பார்க்க மனசு கேக்கல.... நான் இப்போ பெரிய முதலாளி ஒருத்தர்ட்ட டிரைவரா இருக்கேன்.. இருக்க வீடு.. சாப்பாடு எல்லாம் அவுக தர்றாங்க... என் கூட வந்துடு புள்ள..... நாம டவுனுக்கு போயிடலாம்..." என்றான் தங்கவேலு...

நிதானமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த செவப்பி....

"உனக்கும் எனக்கும் இருந்த நேசம் என்னிக்கோ காணாம போச்சுது.. எனக்கு பிடிச்சோ பிடிக்காமையோ என்னோட கண்ணாலம் நடந்துச்சு.. ஆனா இப்ப நான் நிம்மதியா இருக்கேன்.... என்னை மறந்துடு தங்கம்..." குரல் உடையாமல் கணீரென வந்தது செவப்பியிடமிருந்து...

பதிலேதும் பேசாமல் தலையைத் தொங்க விட்ட படியே.. திரும்பி நடக்கலானான் தங்கவேலு....

வெகு தூரம் தங்கவேலு தலை மறையும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தவள்.. கண்களில் கண்ணீர் கசிய தன் முந்தானையால் துடைத்துக் கொண்டபடியே பிழைப்பைப் பார்க்க நடக்கத் துவங்கினாள்...

உச்சி வெயில் தலையில் அடிக்கும் நேரத்தில் தானிருக்கும் குடிசை வந்து சேர்ந்தாள் செவப்பி...

கண் மூடி கிடந்த காளையன், சட்டென விழித்துக் கொள்ள...

"நான்தாங்க... குடிக்க சாப்பாடு கரைச்சிட்டு வர்றேன்.. சேர்ந்தே சாப்பிடலாம் மாமா" என்றாள் செவத்தம்மா...

"சரி செவத்தம்மா...." என்று சொல்லி தலையசைத்தான் காளையன்.. அவர் நினைவுகள் பின்னோக்கி சென்றது..

"அடியே மூதேவி... உனக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்... புருச குடிச்சிட்டு வர்றப்போ... எதுனாச்சும் கறி செஞ்சி வைக்கனும்னு.. இப்படி அன்னாடும் கஞ்சி காய்ச்சி வைச்சா என்னாடி அர்த்தம்...." என்று நாக்கைக் கடித்தபடி.. தன் காலால் செவத்தம்மாவை எட்டி உதைத்தான் காளையன்..

"ஏண்டா அந்த புள்ளய இப்படி போட்டு அடிக்கிற... அவ தாயில்லாத புள்ளன்னு தான் உனக்கு கட்டி வைச்சேன்... நானே இப்போ அந்த புள்ள வாழ்க்கைக்கு கேடு செஞ்சிட்டேனே" என்று புலம்பினார் சிவப்பியின் தாய்மாமன்..

தினம் தினம் நடக்கும் யுத்தத்தைப் பார்த்துப் பார்த்தே சீக்கிரத்தில் இறந்து போனார் சிவப்பியின் தாய்மாமா..

இது நடந்த சிறிது நாட்களில் தான்.. ஒரு நாள் காளையன் குடித்துவிட்டு தாறுமாறாக நடந்து வந்து கொண்டிருக்க.. ஒரு லாரி ஏறி இரு கால்களும் துண்டிக்கப்பட்டது...

நிறைய கடன் வாங்கி சிவப்பி தன் தாலியைக் காப்பாற்றினாள்.. அன்று முதல் இன்று வரை செவத்தம்மாவின் வாழ்க்கை இப்படித் தான் போய்க்கொண்டு இருக்கிறது..

காலையிலேயே கணவரைக் குளிக்க வைத்து... கஞ்சி கொடுத்து படுக்க வைத்துவிட்டு விற்பனைக்கு போனால்... மதியம் தான் வீடு திரும்புவாள்..

ஒரு தட்டில் பழைய சாப்பாடு போட்டு.. தயிரை ஊற்றி.. கரைத்து ஒரு குவளைச் சாதத்தை கையில் ஏந்தி தன் வாயருகே நின்றிருக்கும் செவத்தம்மாவைப் பார்த்து கண்கள் பனித்தது காளையனுக்கு...

"மாமா... உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாரு... நொங்கு மாமா..... உனக்கு ரொம்ப புடிக்கும்னு வாங்கியாந்தேன்... என்ன மாமா.. வேர்க்குதா.. இரு பனையோலை விசிறி வீசி விடுறேன்.... . " என்று எழுந்தவளின் கையைப் பற்றி விம்மி அழ ஆரம்பித்தான் காளையன்..

"என்ன மாமா இது சின்ன குழந்தையாட்டம்.... அழாம சாப்பிடு... காலு வலிக்குதா?" என்று வாஞ்சையாக தலை கோதினாள் செவத்தம்மா...

செவத்தம்மாவின் பாசக் கவனிப்புகளால் அன்றிரவு முழுதும் தூங்காமல் கிடந்தான் காளையன்..

மறு நாள் வழக்கம் போலவே புலர்ந்தது.... காளையனைக் குளிப்பாட்டி கஞ்சி குடிக்க வைத்துவிட்டு.. நகர்ந்த செவப்பியை அருகில் அழைத்தான் காளையன்..

நெற்றி அருகில் முத்தமிட்டு.. "போயிட்டு வா செவத்தம்மா" என்றான் காளையன்..

என்றுமில்லாமல் இன்னிக்கி மட்டுமென்ன புதுசா நடக்குது என்று எண்ண நேரமின்றி.... வியாபாரம் பார்க்க... கிளம்பினாள் செவத்தம்மா..

உச்சி வேளையில் மத்தியான சாப்பாட்டுக்கு வீடு திரும்ப.... அங்கு அசைவற்ற நிலையில் படுத்திருந்தான் காளையன்... வாயில் பச்சை நுரை தள்ளியிருந்தது... ஓடிச் சென்று துடைக்க முந்தானை எடுத்தவளுக்கு அருகில் ஒரு கடிதம் அவர் தலைமாட்டருகே படபடத்தபடி இருந்ததைக் கண்டாள்... அதிர்ச்சி கலையாத முகத்துடன் அந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்..

"அன்புள்ள செவத்தம்மா...

இத்தன நாளும் உனக்கு பண்ணுன கொடுமைக்கெல்லாம் தான் சேர்த்து எனக்கு ஆண்டவன் இந்த தண்டன கொடுத்துட்டான்... ஆனா நான் சொகமா படுக்கையில படுக்க.. நீ தான் தெனமும் கஷ்டப்பட்டுட்டு இருக்கே....

நான் பண்ணுன கொடுமை இப்போ உன்னைத் தான் வாட்டுது.... எனக்கு நானே தண்டன கொடுத்துக்கலாம்னு பல நாள் யோசிச்சிருக்கேன்.. ஆனா நீ அனாதையா போயிடுவியோன்னு பயமா இருந்துச்சு.. ஆனா அன்னிக்கி தங்கவேலைப் பார்த்ததுக்கப்புறம்... எனக்கு நிம்மதி வந்துடுச்சி.... அவன் தான் உனக்கு சரியான புருசனா இருக்க முடியும்... நீ அவனைக் கண்ணாலம் கட்டிக்கோ.. அதுக்கு நான் இடையூறா இருக்க விரும்பல.... அதான் நீ கொடுத்த கஞ்சில... வீட்டைத் துடைச்சு விட வைச்சிருந்த பச்சை சாயத்தைக் கலந்து குடிச்சிட்டேன்.....

நான் பொறந்தது முதல் என் ஆத்தாவை நான் பார்த்ததில்ல... உன்னை என் ஆத்தாவாப் பார்க்கறேன்.. அடுத்த ஜென்மத்துல உந் வயத்துல புள்ளையா பொறக்கனும் புள்ள.... நல்லா இரு.... இந்தப் பாவியோட கடைசி ஆசைய நிறைவேத்து புள்ள....

உன்னோடு வாழத் தகுதியில்லாத,
காளையன்."

-----என்று கிறுக்கலான கையெழுத்தில் எழுதி முடித்திருந்தது.. கடிதத்தின் இறுதியில் காளையன் என்ற எழுத்துகள் கண்ணீரால் அழிந்திருந்தது...

கண்களில் நீர் பெருக...." ஹையோ இப்படி பண்ணிட்டீங்களே...ஏஏஏஏஏஏஏஏஏஎ................." என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தாள் செவத்தம்மா...


கொஞ்ச நாள் கழித்தது....

"ஏலே செவத்தம்மா... வல்லாரைக் கீரை இருக்கா... கட்டு என்ன வெல??" என்று மச்சுவீட்டம்மா கேட்க..


"இருக்குமா... கட்டு ஐஞ்சு ரூபா தாயி..... " என்று கூறிக் கொண்டே கூடையை இறக்க ஆயத்தமானாள் செவத்தம்மா....

(முற்றும்)

[ இக்கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அதற்கான சுட்டி இதோ.
'செவத்தம்மா' ]
__________________
-- பூமகள்.

3 comments:

நிலாரசிகன் said...

என் வலைப்பதிவின் பின்னூட்டம் கண்டு இங்கே.

உங்கள் வலைப்பதிவில் பூக்கள் பறிக்கும் சிறுமியின் புகைப்படம் கண்டு சிலிர்த்துப்போனதென் மனம். அதற்காகவே இந்த பின்னூட்டம்.:)

பூமகள் said...

@ரொம்ப நன்றிகள் நிலாரசிகன். வெகு தாமதமாகவே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். சில சொந்த காரணங்களால் இடையே சில மாதங்கள் எழுத இயலவில்லை..

அச்சச்சோ.. அந்த வலைப்பூ வடிவமைப்பை இப்போது தானே மாற்றினேன்.. :(

நன்றி.

jayakumar said...

good plz visit my blog also